மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.
மின்சார ரயில்கள் ரத்து காரணமாக பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தாம்பரம் ரயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் மின்சார ரயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பின்படி ரத்து செய்யப்பட்டது. 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரயில் பயணம் மேற்கொள்ள வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும், ரயில்கள் ரத்து காரணமாக பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிக அளவிலான வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமித்தன. இதனால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுப்பட்டனர்.