மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து ஆகஸ்ட் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்
நடத்தப்படும் என மதுரையில் எம்.பி சு.வெங்கடேசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்: “இந்திய கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிராக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்கான பட்ஜெட்டாக இல்லாமல் நாற்காலிக்கான பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, பீகாருக்கு மட்டுமே பல்லாயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதிகளை மத்திய அரசு தர மறுக்கிறது. பீகாரில் உள்ள கோசி நதியில் வெள்ள தடுப்பு பணிகளுக்காக 21,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெள்ளம் பாதிக்கப்பட்ட சென்னை, நெல்லை, தூத்துக்குடிக்கு நிதிகள் ஒதுக்கவில்லை, அந்நிய மூலதனத்திற்க்கான வரி குறைப்பு தேசத்தில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும், மாநிலங்களை பழி வாங்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2017 இல் ரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு நிறுத்தியது. ஆவணத்தை தராமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரயில்வேயில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் ரயில்வே வரலாற்றில் இல்லாத அளவிற்கு விபத்துக்கள் நடந்துள்ளன. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரயில் மறியல் நடத்தப்பட உள்ளது. இடதுசாரி கட்சிகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும், பட்ஜெட்டை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பேசி வருகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றம் ஒரு போராட்ட களமாக உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கி உள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரை மெட்ரோ, விமான நிலையம் விரிவாக்கத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒட்டு போடவில்லை என்பதால் ராமரையே பாஜக கைவிட்டது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.