”பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா?” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயற்குழு
கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் நிறைவாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ இன்று ரயில்வே துறையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ரயில் விபத்து தொடர் கதையாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை? மோடி அரசு இதில் ஏன் கவனம் செலுத்தவில்லை? இந்த கேள்வியை காங்கிரஸ் கட்சி இல்லாமல் அனைத்து கட்சிகளும் கேட்கிறது. ரயில்வே பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பாதுகாப்பு பணிகளில் செயல்படுத்தாமல், அதிகாரிகள் பங்களா கட்டிக் கொள்கிறார்கள் என்று இந்தாண்டு சிஏஜி அறிக்கை கூறுகிறது. 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அதிமுக எதற்காக கொடுத்தது? எதற்காக பாமக பெற்றுக் கொண்டார்கள். சமூக நீதிக்காக ஆரம்பிக்கப்பட்டது பாமக. இன்று சமூக நீதிக்காக செயல்படுகிறதா? ஒரு சாமானியனாக நான் கேட்கிறேன். பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா? சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினால்தான், சமூக நீதியை வென்றெடுக்க முடியும் என்று சாதாரண மனிதர்களுக்கும் தெரியும். சாதிவாரி கணக்கெடுப்பும், மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடத்துவதற்கு பாஜக எதிராக இருக்கிறது. 2011 இல் காங்கிரஸ் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினோம். 2021 இல் மோடி அரசு ஏன் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை? இதை பாமக
நிறுவனர், தலைவர் அவரிடம் கேட்பார்களா? பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் சமூக நீதிக்கு எதிரான சித்தாந்தம். கருணாநிதி ஆட்சியில் உள் ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறார். முறையாக எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் அது செல்லுபடியாகும். மக்களை ஏமாற்றகூடாது என்று ஓய்வுபெற்ற நீதியரசர் குழு விசாரணை செய்து அறிக்கை கொடுத்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை கருணாநிதி திமுக ஆட்சியில் கொண்டு வந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தேர்தல் கடைசி நேரத்தில் எந்தவித குழுவும் அமைக்காமல் 10.5% கொடுப்பதாக ஜிஓ வழங்கினார். ஆனால் நீதிமன்றம் இந்த 10.5% இட
ஒதுக்கீட்டிற்கு என்ன ஆதாரம் என்று கேட்டது. அதனால்தான் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு பாமக கட்சி தலைவர் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும். 10.5 சதவீதம் அதிமுக அரசியல் காரணங்களுக்காக வழங்கியது. அரசியல் காரணங்களுக்காக பாமக பெற்றது. இவர் எப்படி முதலமைச்சரை குறை சொல்ல முடியும். பரிசீலனையை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம் என்று தான் முதலமைச்சர் கூறி வருகிறார். கொடுக்க மாட்டோம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. காரியம் ஆக வேண்டும் என்றால் பாமக வீட்டுக்கு செல்வார்கள். கருணாநிதி இட ஒதுக்கீடு கொடுத்தவுடன் பாமக திண்டிவனம் கூட்டத்தில், மகாராஜா நாற்காலியை போட்டனர். கருணாநிதி உட்கார மறுத்தார். சமூகநீதி வென்றெடுத்த நாயகன் என்று சொன்ன அந்த வாய் இப்போ வேற வாயா? கருணாநிதி இல்லை என்றால் எங்கள் சமூகத்திற்கு விடியல் இல்லை என்று பேசினார். திண்டிவனம் பாராட்டு விழா உரையை திரும்பிப் பார்க்க வேண்டும்.
பரந்தூர் விமான நிலையம் தொடர்பான எனது ஆதரவு மக்கள் பக்கம் தான். நாட்டிற்கு வளர்ச்சியின் தேவை இருக்கிறது. திமுக இந்த இடத்தை முடிவு செய்யவில்லை. கடந்த கால ஆட்சியில் பரந்தூர் விமான நிலையம் கட்ட பரிந்துரை வழங்கப்பட்டது. எந்த காலத்திலும் மக்களுக்கு விரோதமாக இந்த ஆட்சி நடக்காது. முதலமைச்சர் அதை அனுமதிக்க மாட்டார். பரந்தூர் மக்களை முதலமைச்சர் அழைத்து பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக” தெரிவித்தார்.