மக்களவையில் அம்பானி, அதானிக்கு ஒதுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து ராகுல் காந்தி பட்டியலிட்டார். அதற்கு மக்களவை சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே அதற்கு பதிலாக ஏ1, ஏ2 என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கி, ஜூலை 23-ம் தேதி 2024 – 2025-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. அந்தவகையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் பல்வேறு அடிப்படை மற்றும் முக்கிய விஷயங்கள் குறித்து பேசினார். அவர் பேசும்போது, அம்பானி, அதானிக்கு ஒதுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து பட்டியலிட்டார். அதற்கு, அம்பானி, அதானி பெயர்களைக் குறிப்பிடக்கூடாது என்று அவைத் தலைவர் கூறியதால், ஏ1 என அம்பானியையும் ஏ2 என அதானியையும் குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசினார்.
அவர் பேசியதாவது, “காங்கிரஸ் ஆட்சியல் செயல்படுத்திய திட்டங்களை சக்கரவியூகத்தின் மூலம் பாஜக நசுக்குகிறது. மகாபாரதத்தில் 6 பேர் சக்கர வியூகத்தை அமைத்து கட்டுப்படுத்தினர். தற்போதும் நரேந்திர மோடி, அமித்ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி (ஏ1), அதானி(ஏ2) என 6 பேரின் சக்கரவியூகத்தில் இந்தியா சிக்கிக் கொண்டுள்ளது. கோயிலின் கருவறைக்குள் கூட அனைவரும் நுழைந்துவிட முடியும். ஆனால், பாஜகவின் சக்கரவியூகத்துக்குள் ஆறு பேர் மட்டுமே நுழைய முடியும். இந்த சக்கர வியூகத்தால் மாநில அரசுகள் ஒடுக்கப்படுகின்றன. பாஜகவின் இந்த சக்கர வியூகத்தை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். இந்த சக்கரவியூகத்தை நிச்சயம் நாங்கள் தகர்த்து எறிவோம். நாட்டில் தற்போது அச்சமான சூழல் நிலவுகிறது. பாஜகவின் சக்கரவியூகத்தை எதிர்க்கட்சிகள் உடைத்துவிடும். குருக்சேத்திர போரில், அபிமன்யு என்ற இளைஞர், சக்கரவியூகத்தின் மூலம் ஆறு பேரால் கொலை செய்யப்பட்டார். ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து தொடர்பான இரண்டு பெரிய ஒப்பந்தங்கள், ஏ1 மற்றும் ஏ2 வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ரயில்வேயும் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் சென்றுகொண்டிருக்கிறது” இவ்வாறு தெரிவித்தார்.
அதானி, அம்பானி பெயரை குறிப்பிடவும் பாஜக எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ராகுல் காந்தி பேசிக் கொண்டிருக்கும் போது பாஜக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் ராகுல் காந்தி பேச்சின் போது குறுக்கிட்டார். இதற்கு இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.