சட்டசபைக்குள் குட்கா எடுத்துச் சென்றது தொடர்பாக உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை தனி நீதிபதி ரத்து செய்தார். அந்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட 17 தி.மு.க.. எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பாக சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.
அதிமுக ஆட்சியில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு வந்தது தொடர்பாக, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நோட்டீசை உயர்நீதிமன்றம் இரு முறை ரத்து செய்தது. இதை எதிர்த்து அதிமுக ஆட்சியில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஜூலை 29ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், உரிமை மீறல் நோட்டீசுக்கு முதல்வர் உள்ளிட்ட 17 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.