பு.கஜிந்தன்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா மீதான வழக்குகள் 31/07 புதன்கிழமை சாவகச்சேரி நீதிமன்றில் நீதிபதி அ.யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட 5வழக்குகளே குறித்த தினத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது வைத்தியர் அர்ச்சுனா சார்பாக சட்டத்தரணி ஸெலஸ்ரின் ஆஜராகியிருந்தார்.
வைத்தியர் அர்ச்சுனா ஊழல் – மோசடிகளை தடுக்கும் முகமாகவே கடமை நேரத்தில் வைத்தியர்கள் வெளியே செல்வதனைத் தடுத்திருந்தார் எனவும் -வைத்தியர்கள் கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றிவிட்டு பின்னர் மேலதிக நேரக் கடமை என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை சூறையாடுவதாகவும் அவர் தனது வாதத்தின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்போது இரு தரப்பு விவாதங்களையும் கவனத்தில் எடுத்த நீதிபதி 5வழக்குகளையும் எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்கு தவணையிட்டுருந்தார்.
அதேநேரம் வைத்தியர் அர்ச்சுணா சாவகச்சேரி வைத்தியசாலையில் வைத்து தனது தொலைபேசி மற்றும் பணத்தை பறித்தமைக்காக வைத்தியர்கள் மீது தொடுத்த வழக்கும் குறித்த தினத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.