“விண்வெளியில் கூட இனி அரசுப் பள்ளி மாணவர்கள் ஆட்சி செலுத்துவார்கள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக எப்போது உயர்வார்கள் என்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் ஏங்கினார்.
இப்போது அவர் இல்லை. இருந்திருந்தால் பாராட்டி இருப்பார். மாணவர்கள் உயர்ந்தால் அந்த பெருமை ஆசிரியர்களுக்கு உண்டு. குழந்தைகள் உயர்ந்தால் அந்த பெருமை பெற்றோர்களுக்கு உண்டு. உங்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் நான் பாராட்டுகிறேன். பள்ளிக்கல்வித் துறையின் முன்னெடுப்பு இல்லையெனில் இந்த சாதனையை நாம் அடைந்திருக்க முடியாது. இங்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக உள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழி நான் பார்த்து வளர்ந்த பிள்ளை. இன்னொரு முக்கிய விஷயம். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாக சொன்னார்.
அதற்காக அந்த துறையின் அமைச்சரான அன்பில் மகேஸுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. நீங்கள் செய்துள்ளது சேவை. மாணவர்களின் அறிவாற்றல் உலகிற்கே பயன்பட போகிறது. கல்வித்துறை திராவிட மாடல் ஆட்சியில் மறுமலர்ச்சி அடைந்துள்ளது. உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே முதலில் உள்ளது. புதுமை பெண் திட்டத்தின் பயனாக, 34 விழுக்காடு மாணவிகள் சேர்க்கை உயர்கல்வியில் அதிகரித்துள்ளது தமிழ்நாட்டு மாணவர்களின் வேகம் இந்தியாவோடு மட்டும் நிற்கவில்லை. 14 மாணவர்கள் தைவான், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் முழு கல்வி செலவை இலவசமாக பெற்றுள்ளனர். அவர்கள் பயணம் செய்யும் முழு செலவை அரசு செய்யும். அரசுப்பள்ளி மாணவர்கள் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களுக்கு செல்வது, சமூக பொருளாதார மாற்றத்திற்கான அடித்தளம். இதன்மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சலைத்தவர்கள் இல்லை என்பதை அடிக்கடி நிரூபிக்கின்றனர். வாய்ப்பு கிடைத்தால் நம் மாணவர்கள் எதையும் சாதிப்பார்கள். விண்வெளியில் கூட இனி அரசுப் பள்ளி மாணவர்கள் தான் ஆட்சி செலுத்துவார்கள். அவர்களுக்கு என் அரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.