நடராசா லோகதயாளன்
இலங்கையின் வட கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்படித்த காரணத்தால் இலங்கையில் சிறையில் உள்ள இந்திய மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவித் தொகையை 250 ரூபாவில் இருந்து 350 ரூபாவாக உயர்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலின் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை சிறையில் சிறை வைக்கப்படும் இந்திய மீனவர்களிற்கான உதவி அதிகரிக்கப்படும் அதே நேரம் கடற்படையால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றங்களினால் அரச உடமையாக்கப்படும் விசைப்படகுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையான 5 லட்சம் ரூபாவினை 6 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு அரச உடமையாக்கப்படும் நாட்டுப்படகுகளின் உரிமையாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் நிவாரணத் தொகையான ஒரு லட்சம் ரூபாவனை 2 லட்சமாக உயர்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சந்திக்க அனுமதி வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலின் வேண்டுகோள் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.