கதிரோட்டம் 02-08-2024
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவினால் நடத்தப்பெறும் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. பொருளாதார ரீதியில் ஆட்டம் கண்டு ஊழல் , விரயம், இலஞ்சம். நிர்வாகச் சீர்கேடுகள், நாட்டின் அடிமட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகள் சரியாகச் சென்றடையாமல் அரசியல்வாதிகளாலும் உயர் அதிகாரிகளினாலும் அவர்களின் தரகர்களினாலும் நிதியும் வளங்களும் சுரண்டப்படுகின்ற ஒரு அமைப்பு ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் நிலையில் மீண்டும் ஒரு ஜனாதிபதியை காண்பதற்கு நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
தாங்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் வாழ்வதில் எதிர் கொள்ளும் சவால்கள், விலைவாசி அதிகரிப்பு. கட்டணங்களின் உயர்வு, ஆகியவற்றால் நாளாந்தம் முகம் கொடுக்கும் அச்சம் ஆகியவற்றின் மத்தியில் தங்கள் வாக்குகளை நேர்மையான ஒருவருக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் தங்களை ஆயத்தப்படுத்தும் மன நிலையில் உள்ளார்கள்.
ஆனாலும். இவ்வாறான இடர்கள் மிகுந்த காலப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், அதிகரித்து வரும் ஊழல்களினால் தேசத்தின் திறைசேரியில் எஞ்சியிருக்கும் நிதியை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்வதற்கும் ஆட்சியாளர்கள் மூலம் தங்களுக்கு கிட்டவுள்ள சுகபோகங்களை அனுபவிப்பதற்கும் இன்னும்மொரு ‘கூட்டம்’ அந்தத் தீவின் எட்டுத் திசைகளிலும் தயாராகி வருகின்றது.
இந்த ‘கூட்டணி’யில் அங்கம் வகிப்பவர்கள் அனைவருமே தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மையல்ல. நாம் வெட்கப்படும் வகையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் போன்ற பகுதிகளில் உள்ள மூவினங்களைச் சேர்ந்தவர்களும் மறைமுகமான ‘கூட்டணி’ போன்ற ஒரு பிணைப்புடன் முனைப்புடன் தங்கள் கபடத்தனமான பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளார்கள் என்பதும் வெளிச்சமாகவே தெரிகின்றது தம்மோடு ஒத்துழைக்கக் கூடிய ஒருவரை தேர்ந்தெடுப்பதில் இலங்கையின் மூவினங்கள் சார்ந்த ‘கயவர்களின்’ கூட்டு முனைப்பைக் காட்டுகின்றது
இந்தக் ‘கயவர்கள்’ தங்களுக்கென ஒரு கூடாரத்தை மாத்திரம் வைத்திருக்கவில்லை. ஆங்காங்கே பல கயவர்கள் ஒவ்வொரு பாதையில் பயணித்து தங்களுக்கு ஏற்ற ஒருவரை தேர்ந்தெடுப்பதில் கவனமாக உள்ளார்கள்.
அநுர குமார போன்ற ஓரளவு நம்பகத் தன்மை கொண்டவர்களின் பெயர்கள் சாதாரண மக்கள் மத்தியில் உச்சரிக்கப்படுகையில் அவர் வடக்கையும் கிழக்கையும் பிரித்தார் என்று தமிழர்களை நோக்கி தகவல்கள் வேகமாக அனுப்பப்படுகின்றன.. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்கவும் போராளிகளின் தியாகத்தை நசுக்கவும் காரணமானவர்களை மீண்டும் தேர்ந்தெடுப்பதில் ‘கயவர்களின்’ கவனம் மேலோங்கி உள்ளது. போர் என்ற போர்வையில் தமிழ் பேசும் அரசியல்வாதிகளைக் ‘கைகளுக்குள்’ வைத்துக் கொண்டு போராளிகளையும் அவர்களுக்கு ஆதரவானவர்களையும் அழித்தர்களே அன்றி அவர்களது சகாக்களையோ தெரிவு செய்வது நாட்டுக்கு நல்லது அல்ல என்பதை நன்கு அறிந்து கொண்டாலும் அந்தக் ‘கயவர்கள்’ தமக்கு ஏற்றவர் ஒருவரை பதவியில் அமர்த்த இரவு பகலாய் கபடத்தனம் புரிகின்றார்கள்.
கொள்கைகளின் அடிப்படையில் எவ்விதமான தகுதியும் அற்ற ஒருவரை தேர்ந்தெடுப்பதில் நாம் முன்னர் குறிப்பிட்ட மூவினங்களின் பிரதிநிதிகளாக செயற்படும் கயவர்கள் ஒரு பாரிய வலயத்தை தோற்றுவித்துள்ளார்கள். அந்த வலயத்திற்குள் கோடிக்கணக்கான ரூபாய்கள் புரளத் தொடங்கியுள்ளன. இந்தத் தொகையை சமனான அளவில் தேர்தலுக்கு முன்னரேயே பங்கிட்டுக் கொடுக்க ‘அந்த ‘கயவர்’களின் தெரிவாக உள்ள வேட்பாளர் இணங்கியுள்ளதாகவும் அறியப்படுகின்றது. தேர்தலுக்கு முன்பாகவே இத்தனை ‘இலாபங்களா?’ ‘அப்படியானால் தேர்தலுக்குப் பின்னர் என்னென்ன எம் கைகளுக்குள் வரும்” என்று வாயைப் பிளக்கும் ‘கயவர்களின்’ எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் தகவல்களை அவர்களே பரப்புகின்றார்கள்.
கடைசியில்; ‘அரகலய’ போன்ற ஒரு போராட்டத்தையோ அன்றில் தமிழர் பகுதியில் எழுச்சியோடு மக்கள் போராடியது போன்றோ ஒரு நிலை வராதா? என்று நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ஏக்கத்தோடு குரல் எழுப்பும் நிலை தீவெங்கும் தோன்றும் நாள் விரைவில் வரும்!