”எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் நாட்டின் பிரதமராக 7 தடவைகள் பதவிவகித்தவரும் தற்போது ஜனாதிபதியாக இருபவருமான ஒருவர் சுயேட்சையாக போட்டியிடும் தேர்தலாகவும் ஒரேகட்சியை சேர்ந்த மூவர் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடும் தேர்தலாகவும் ஏற்கனவே தேர்தலில் தோல்விகண்ட 4 வேட்பாளர்கள் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடும் தேர்தலாகவும் முதல் தடவையாக தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிடவுள்ள தேர்தலாகவும் சில சுவாரஷ்யங்களைக் கொண்டுள்ளது”
கே.பாலா
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தேர்தல்,இழுபறிகள், சர்ச்சைகள் ,சதிகள்,நிறைந்ததாக மட்டுமன்றி சில சுவாரஷ்யங்கள் நிறைந்த தேர்தலாகவும் மாறிப்போயுள்ளது.
இந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சர்ச்சைகள்,சதிகள் தொடர்பில் ஏற்கனவே பல தடவைகள் பார்த்தும் படித்ததும் விட்டதனால் இதில் இந்த தேர்தலில் உள்ள சில சுவாரஷ்யங்களை மட்டும் பார்ப்போம் .அதனைப் பார்க்க வேண்டுமானால் முதலில் இலங்கையில் இதுவரையில் நடந்து முடிந்த 8 ஜனாதிபதித்தேர்தல்கள் தொடர்பில் மீள் பார்வை செலுத்த வேண்டும்.
இலங்கையில் 1978 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம், கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளை தெரிவு செய்வதற்காக இதுவரை 8 ஜனாதிபதித் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.இதன்படி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதலாவது தேர்தல் 1982-10-20 ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஜனாதிபதி வேட்பாளர்களாக ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து ஜே .ஆர்.ஜெயவர்த்தன.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து எச்.எஸ்.ஆர்.பி. கொப்பேக்கடுவ , ஜே .வி.பி.யிலிருந்து ரோஹன விஜே வீர ,அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து ஜீ.ஜீ. பொன்னம்பலம்,லங்கா சமசமாஜக்கட்சியிலிருந்து கலாநிதி கொல்வின் சில்வா ,நவசமாசமாஜக்கட்சியிலிருந்து வாசுதேவ நாணயக்கார ஆகியோர் களமிறங்கினர்.
இதில் ஜே .ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் கொப்பேக்கடுவவுக்குமிடையில் போட்டி ஏற்பட்ட நிலையில் ஜெயவர்த்தன 34,50811வாக்குகளை ப்பெற்று வெற்றியடைய, கொப்பேக்கடுவ 25,48439 வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார். இதில் ஜே .வி.பி. வேட்பாளரான ரோஹன விஜே வீர 2,73428 வாக்குகளையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளரான ஜீ.ஜீ. பொன்னம்பலம் 1,73934 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இந்த தேர்தலில் 52.91 வீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரண்டாவது தேர்தல் 1988-12-19 ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஜனாதிபதி வேட்பாளர்களாக ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து ரணசிங்க பிரேமதாச ,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க .சிங்கள மக்கள் கட்சியிலிருந்து அபேகுணசேகர ஒஸ்வின் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரணசிங்க பிரேமதாசவுக்கும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்குமிடையில் போட்டி ஏற்பட்ட நிலையில் ரணசிங்க பிரேமதாச 25,69199 வாக்குகளை ப்பெற்று வெற்றியடைய, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க 22,89960வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார். இதில் வாக்களிப்பு வீதம் 50.43 ஆகப் பதிவானது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான மூன்றாவது தேர்தல் 1994-11-09ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஜனாதிபதி வேட்பாளர்களாக ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து காமினி திஸாநாயக்க, பொதுஜன முன்னணியிலிருந்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாதுங்கா உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் களமிறங்கினர் தேர்தல் களத்தில் காமினி திஸாநாயக்க கொல்லப்படவே அவரின் மனைவியான வஜிர ஸ்ரீமதி போட்டியிட்டார். வஜிர ஸ்ரீமதிக்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்குமிடையில் போட்டி ஏற்பட்ட நிலையில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா 47,09205 வாக்குகளை ப்பெற்று வெற்றியடைய, வஜிர ஸ்ரீமதி 27,15705 வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார். இதில் வாக்களிப்பு வீதம் 62.28 ஆகப் பதிவானது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நான்காவது தேர்தல் 1999-12-21ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஜனாதிபதி வேட்பாளர்களாக ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க , பொதுஜன முன்னணியிலிருந்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா,ஜே .வி.பி.யிலிருந்து நந்தன குணதிலக உள்ளிட்ட 13 வேட்பாளர்கள் களமிறங்கினர் .இதில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்குமிடையில் போட்டி ஏற்பட்ட நிலையில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா 43,12157வாக்குகளைப்பெற்று வெற்றியடைய, ரணில் விக்கிரமசிங்க 36,02748 வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார். ஜே .வி.பி.யிலிருந்து களமிறங்கிய நந்தன குணதிலக 3,44173 வாக்குகளைப்பெற்றிருந்தார் இதில் வாக்களிப்பு வீதம் 51.12 ஆகப் பதிவானது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஐந்தாவது தேர்தல் 2005-11-17ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஜனாதிபதி வேட்பாளர்களாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பிலிருந்து மஹிந்த ராஜபக்ச,ஐக்கியதேசிய முன்னணியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 13 வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில்மஹிந்த ராஜபக்சவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் போட்டி ஏற்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ச 48,87152 வாக்குகளைப்பெற்று வெற்றியடைய, ரணில் விக்கிரமசிங்க 47,0636 வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார்.இதில் வாக்களிப்பு வீதம்73.73ஆகப் பதிவானது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஆறாவது தேர்தல் 2010-01-26ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஜனாதிபதி வேட்பாளர்களாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பிலிருந்து மஹிந்த ராஜபக்ச,புதிய ஜனநாயகக்கட்சியிலிருந்து முன்னாள் இராணுவத்தளபதியான சரத் பொன்சேகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில் மஹிந்த ராஜபக்சவுக்கும் சரத் பொன்சேகவுக்கும் போட்டி ஏற்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ச 60,15934 வாக்குகளைப்பெற்று வெற்றியடைய, சரத் பொன்சேகா 41,73185 வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார்.இதில் சுயேட்சையாகபோட்டியிட்ட தமிழ் வேட்பாளரான எம்.கே. சிவாஜிலிங்கம் 9,662வாக்குகளைப் பெற்றிருந்தார் .இதில் வாக்களிப்பு வீதம்74.50 ஆகப் பதிவானது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஏழாவது தேர்தல் 2015-01-08ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஜனாதிபதி வேட்பாளர்களாக புதிய ஜனநாயகக்கட்சியிலிருந்து மைத்ரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பிலிருந்து மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 19 வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில் மைத்ரிபால சிறிசேனவுக்கும் மஹிந்த ராஜபக்சவுக்கும் போட்டி ஏற்பட்ட நிலையில் மைத்ரிபால சிறிசேன 62,17162 வாக்குகளைப்பெற்று வெற்றியடைய, மஹிந்த ராஜபக்ச 57,68090வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார்.இதில் வாக்களிப்பு வீதம்81.52 ஆகப் பதிவானது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான எட்டாவது தேர்தல் 2019-11-16ஆம் திகதி நடைபெற்றது. இதில் ஜனாதிபதி வேட்பாளர்களாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச,புதிய ஜனநாயகக் கட்சியிலிருந்து சஜித் பிரேமதாச ,தேசிய மக்கள் சக்தியிலிருந்து அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட 34 வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில் கோத்தபாய ராஜபக்சவுக்கும் சஜித் பிரேமதசாவுக்கும் போட்டி ஏற்பட்ட நிலையில் கோத்தபாய ராஜபக்ச 69,24255 வாக்குகளைப்பெற்று வெற்றியடைய, சஜித் பிரேமதாச 55,64239வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார்.இதில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க 4,18553 வாக்குகளையும் சுயேச்சையாக போட்டியிட்ட தமிழ் வேட்பாளரான எம்.கே.சிவாஜிலிங்கம் 12,256 வாக்குகளையும் பெற்றனர் .இதில் வாக்களிப்பு வீதம்81.52 ஆகப் பதிவானது.
இவ்வாறு இதுவரையில் நடந்து முடிந்த 8 ஜனாதிபதித் தேர்தல்களில் தற்போதைய ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நான்காவது தேர்தலில் 1999-12-21ஆம் திகதி போட்டியிட்டு பொதுஜன முன்னணியிலிருந்து போட்டியிட்ட சந்திரிகா பண்டாரநாயக்கவிடம் தோல்வியடைந்தார். அதன்பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஐந்தாவது தேர்தலில் 2005-11-17ஆம் திகதி போட்டியிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்சவிடம் தோல்வியடைந்தார்.
எனினும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக 2021ஆம் ஆண்டில் வெடித்த மக்கள் போராட்டத்தினால் எந்தத்தேர்தலிலும் போட்டியிடாமலே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாகி தற்போது மீண்டும் ஜனாதிபதியாக தேர்தலில் போட்டியிடுகின்றார். அதாவது இருதடவைகள் மக்களினால் நிராகரிக்கப்பட்டவர் மூன்றாவது முறையாக மக்கள் ஆணை கேட்டு இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளார். அதிலும் முதலில் ஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதி வேட்பளராகவும் இரண்டாவது தடவையாக ஐக்கியதேசிய முன்னணி வேட்பாளராகவும் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க இந்த முறை சுயேட்சை வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான எட்டாவது தேர்தலில் 2019-11-16ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய சஜித் பிரேமதாச , நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளராக களமிறங்குகின்றார்.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமாரதிசாநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான எட்டாவது தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளராக 2019-11-16ஆம் திகதி போட்டியிட்டு ஜனாதிபதி வேட்பாளர்களான கோத்தபாய,சஜித் பிரேமதாச ,ஆகியோரிடம் தோல்வியடைந்தார்.எதிர்வரும் தேர்தலில் அவர் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுடனும் சஜித் பிரேமதசாவுடனும் போட்டியிடுகின்றார்.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஆறாவது தேர்தலில் 2010-01-26ஆம் திகதி புதிய ஜனநாயகக்கட்சி வேட்பாளராக களமிறங்கி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வேட்பாளரான மஹிந்த ராஜபக்சவிடம் தோல்வியடைந்தார் .எதிர்வரும் தேர்தலில் இவர் ரணில்,சஜித், அநுர ஆகியோரை எதிர்த்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்கிரமசிங்க ஐக்கியதேசியக் கட்சியின் தலைவராகவுள்ள நிலையில் அவரை எதிர்த்து களமிறங்கியுள்ள சஜித் பிரேமதச ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவராக இருந்தவர். அதன்பின்னரே அதிலிருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரானார். ஆக, இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதித்தலைவரும் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர் .இதில் ஒருவர் போட்டியிட்டால் ஐக்கியதேசியக்கட்சியின் வாக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்கும் ஒருவருக்கு மட்டுமே செல்லும் ஏனெனில் இருவரும் ஐக்கியதேசியக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதனால் இருவரும் பிரிந்தாலும் இருவரினதும் ஆதரவாளர்கள் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் .இவர்கள் பாராளுமன்றத்தேர்தலில் பிரிந்து வாக்களித்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் ஒருவருக்கு வாக்களிக்கும் வாய்ப்பே இருந்தது. ஆனால் தற்போது தலைவரும் முன்னாள் பிரதித்தலைவரும் போட்டியிடுவதனால் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது
அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்த்து அதேகட்சியின் முன்னாள் தவிசாளரான முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா களமிறங்குகின்றார்.இதனால் ஐக்கியதேசியக்கட்சியின் தலைவர், முன்னாள் பிரதித்தலைவர்,அக்கட்சியில் அமைச்சராக இருந்தவர் என ஒரே கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய மூவர் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடும் நிலை இத்தேர்தலில் ஏற்பட்டுள்ளது .சரத் பொன்சேகா இறுதி நேரத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இதேவேளை இத்தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் இருதடவைகள் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் ,சஜித் பிரேமதாச , அநுரகுமார திசாநாயக்க, சரத் பொன்சேகா ஆகியோர் ஒவ்வொருதடவைகள் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள். ஆக இந்தத்தேர்தலில் ஏற்கனவே தோல்வியடைந்த வேட்பாளர்களே மீண்டும் வெற்றிக்காக பிரதான வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இதேவேளை இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளை தெரிவு செய்வதற்காக இதுவரை 8 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.இதன்படி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதலாவது தேர்தல் 1982-ஆம் ஆண்டு நடைபெற்ற போது இந்த தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஜி.ஜி.பொன்னம்பலம் போட்டியிட்டிருந்தார்.
1982-ஆம் ஆண்டுக்கு பின்னர் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை தமிழ் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிட்டிருந்தார்.அதன்பின்னர், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சுந்தரம் மகேந்திரன் போட்டியிட்டதுடன், இறுதியாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சுப்ரமணியம் குணரத்னம் ஆகிய தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந் நிலையிலேயே இந்தத்தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முதல் முயற்சி இடம்பெறுகின்றது.
அத்துடன் நாட்டின் பிரதமராக 7 தடவைகள் பதவிவகித்தவரும் தற்போது ஜனாதிபதியாக இருப்பவருமான ஒருவர் சுயேட்சையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கட்டுப்பணம் செலுத்திய விந்தையும் இந்தத் தேர்தலிலேயே இடம்பெற்றுள்ளது .அதுமட்டுமன்றி நாட்டில் பொலிஸ்மா அதிபர் ஒருவர் பதவியில் இல்லாத நிலையில் நடைபெறும் தேர்தலாகவும் இது இடம் பிடிக்கவுள்ளது.