தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜனநாயகத்தை காப்பதற்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவை மூலம் நசுக்கும் பணியில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருகிறது. ராகுல் காந்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினால் அதனை காங்கிரஸ் கட்சியினர் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் சிலர் வீட்டில் மத்திய பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறையை ஏவி முன்பு சோதனை நடத்தினர். தற்போது அந்த கட்சியினர் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலையில் உள்ளதால் அவர்கள்மீதான வழக்குகளை ரத்து செய்துவிட்டனர். மக்களவையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல்காந்தி பேசியபோது அவருக்கு எதிராக பா.ஜ.க. எம்.பி. அனுராக்தாக்கூர் பேசியது ஆணவத்தின் உச்சம். வயநாடு நிலச்சரிவில் பேரிடர் குறித்து ஏற்கனவே எச்சரித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார். ஆனால் அவ்வாறு பேரிடர் நடப்பதாக தெரிந்திருந்தால் ஏன் அங்கு தேசிய பேரிடர் மேலாண்மைக்குழு, ராணுவத்தை அனுப்பி வைக்கவில்லை. வயநாடு நிலச்சரிவிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனமில்லாமல் பா.ஜ.க. அரசியல் செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு 2 நாட்களாக முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வீடுகளை இழந்தவர்களுக்கு கட்சியின் சார்பில் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.