படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி சென்னை, பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, குன்றத்தூரைச் சேர்ந்த ரவுடி திருவேங்கடம், பூந்தமல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், அஞ்சலை, ஹரிஹரன், சதீஷ் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14-ம் தேதி என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தற்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், ஆம்ஸ்ட்ராங் மனைவி, உறவினர்கள் வசிக்கும் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்புக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.