வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 406 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர். சுமார் 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து 7வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 406 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இதுவரை 172 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 8 பேரின் உடல்கள் நேற்று தகனம் செய்யப்பட்டன. மீதமுள்ளவர்களின் உடல்கள் இன்று தகனம் செய்யப்படுகிறது. சாலியாற்றில் மீட்கப்பட்ட ஏராளமான உடல்கள் அடையாளம் தெரியாத நிலையில், உறவினர்களும், நண்களுடம் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். இடிபாடுகளிலிருந்து பலரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் டிஎன்ஏ சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். 100 நிவாரண முகாம்களில் சுமார் 9,500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், நான்கு மாநில அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை துணைக்குழு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறது.