வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் நிலச்சரிவால் குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு மட்டுமல்லாது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கும் மாநில அரசு சார்பில் மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பலரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இதனை தேசிய பேரிடர் அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில், முன்னாள் மத்திய இணையமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வி.முரளீதரன் வலைத்தளத்தில் ஆக. 4ம் தேதி வெளியிட்ட பதிவில் வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என மீண்டும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தினார். மேலும், நிலச்சரிவால் தங்களது உடைமைகள் மற்றும் வீடுகளை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க வேண்டும். வயநாடு நிலச்சரிவு பதிப்பு குறித்து உறுதுணையாக ஆதரவளித்து அனைத்து மக்களவை உறுப்பினர்களுக்கு நன்றி. எனவும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.