தமிழ் மக்களின் கவனம் மருத்துவர் அர்ச்சுனாவிலிருந்து ஓரளவுக்கு தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கித் திரும்பியிருக்கிறது. பெரும்பாலும் இக்கட்டுரை பிரசுரிக்கபடுகையில் யார் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது தெரிய வந்துவிடும். இதை இன்னும் அழுத்தமாகச் சொன்னால் பொதுமக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச்சபையும் ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட பொது வேட்பாளர் யார் என்பது பெரும்பாலும் தெரிய வந்திருக்கும்.
கடந்த சில வாரங்களாக யார் அந்தப் பொது வேட்பாளர் என்பது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. ஊடகங்கள் ஊகங்களையும் கற்பனைகளையும் எழுதின. சில ஊடகவியலாளர்கள் பொதுக் கட்டமைப்பின் இயலாமை குறித்து கேள்விகளை எழுப்பினர். இவ்வளவு காலமாகத் தேடியும் ஒரு பொது வேட்பாளரை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறார்கள் என்றெல்லாம் விமர்சித்தனர்.
தமிழ் மக்கள் பொதுச் சபையைச் சேர்ந்த அரசியல் விமர்சகர்கள் கடந்த பல மாதங்களாக தாங்கள் எழுதி வரும் கட்டுரைகளிலும் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் கருத்துக்களிலும், ஒரு பொது வேட்பாளர் ஒரு பொதுவான ஆளாக இருப்பார் என்று தான் கூறி வந்தார்கள். அவர் ஓர் அரசியல்வாதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர் ஒரு குறியீடு மட்டுமே, அவர் ஒரு பிரபல்யமாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறி வந்தார்கள். ஆனால் அவ்வாறான ஒருவரைத் தமிழ்ச் சமூகத்தில் தேடிக் கண்டுபிடிப்பதற்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது?
ஏனென்றால், தமிழ் மக்கள் சிதைந்து போய்விட்டார்கள். தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கவல்ல தலைவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள். தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பொதுநிலைப்பாட்டை எடுத்து அந்த பொதுநிலைப்பாட்டுக்கு தலைமை தாங்கவல்ல தலைவர்கள் இல்லாமல் போய் விட்டார்கள். இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொன்னால், மக்களை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கவல்ல ஜனவசியம் மிக்க தலைவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள். இது தமிழ் அரசியலின் மிகச் சீரழிவான நிலைமையைக் காட்டுகின்றது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு தமிழ்ப் பொது நிலைப்பாட்டை எடுத்து ஒரு தமிழ் பொது வேட்பாளரை அதற்காக தேடுவது என்பது கடினமானது தானே? அதுதான் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கு வந்த சோதனையும்.
அரசியலில் மட்டுமல்ல வாழ்க்கையில் எல்லாவற்றிலுமே 100% முழுமையை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர் தமிழ்ப் பொது நிலைப்பாட்டைக் குறிப்பவர். தமிழ்ப் பொதுநிலைப்பாடு என்பது தமிழ்த் தேசிய நிலைப்பாடுதான். தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்பது தமிழ் மக்களை இன்று பிரித்து வைத்திருக்கும் அல்லது சிதறடித்து வைத்திருக்கும் எல்லா அம்சங்களுக்கும் அப்பால் ஒரு தேசமாகத் திரட்டுவது.அவ்வாறு தமிழ் மக்களை ஒன்றாகத் திரட்டுவதற்குரிய ஓர் அரசியல்வாதியை 100% பொருத்தமாக கண்டுபிடிப்பது கடினமானது. எனினும் இருப்பவற்றில் சிறந்தது, அல்லது தமிழ் மக்களை ஒன்றாகத் திரட்டுவதற்கு எது அவசியமானது? என்ற அளவுகோல்களின் அடிப்படையில் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் இவ்வளவு காலமும் தேட வேண்டியிருந்தது என்று தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் பொதுக் கூட்டமைப்பும் தெரிவிக்கின்றன.
அரசியல்வாதி அல்லாத ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற வாதம் தமிழ் மக்கள் பொதுச் சபைக்குள் வலிமையாக இருந்தது. கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தாத ஒருவரைத் தெரிவு செய்வது அவசியம் என்றும் அங்கு வலியுறுத்தப்பட்டது. அதேசமயம் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் காணப்படும் கட்சிகள் அந்த விடயத்தில் வேறுவிதமான பார்வையை கொண்டிருந்தன. வாக்குத் திரட்டக்கூடிய, ஒப்பீட்டளவில் பிரமுகராக இருக்கும் ஒருவரைத் தெரிவுசெய்ய வேண்டும் என்ற விருப்பம் கட்சிகளிடம் அதிகமாக இருந்தது. எனினும் பல்வேறு பெயர்கள் மேசையில் வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டன.
ஜனாதிபதித் தேர்தல் பொறுத்து தமிழ்ப் பொது கட்டமைப்புக்கு இருந்த சவாலான விடயம் என்னவென்றால், ஏதோ ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியில் தங்கியிருக்க வேண்டும், அல்லது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரில் தங்கியிருக்க வேண்டும். ஏனெனில் தேர்தல் சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம். அல்லது முன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுயேட்சையாகக் களமிறங்கலாம். எனவே இந்த இரண்டு விடயங்களிலும் ஏதோ ஒரு விகிதமளவுக்கு அரசியல்வாதிகள் அல்லது கட்சிகளைச் சார்ந்து சிந்திக்க வேண்டியிருந்தது.
ஒரு சிவில் சமூகப் பிரதிநிதியை பொது வேட்பாளராக நிறுத்துவது என்றால் அதற்கு ஒரு கட்சி வேண்டும். அந்த கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக, அந்தக் கட்சியானது ஜனாதிபதி தேர்தல் மூலம் அதற்கு கிடைத்த ஆதரவையும் புகழையும் பலத்தையும் அடுத்தடுத்த தேர்தல்களில் தனிப்பட்ட அந்தக் கட்சியின் தேவைகளுக்கு பயன்படுத்துவதை எப்படி வரையறைக்கு உட்படுத்துவது என்ற கேள்வி. ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் அக்கட்சிச் சின்னம் பெற்ற வெற்றியை பின்னர் அக்கட்சியின் தனிநிலைபாட்டுக்கு மடைமாற்றக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.
தமிழ் மக்கள் பொதுச் சபையிடம் கட்சி இருக்கவில்லை. அது கட்சி மய்யக் கட்டமைப்பும் அல்ல. அது தேர்தல் மையக் கட்டமைப்பு அல்ல என்பது தெளிவாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பொது வேட்பாளருக்கு பயன்படுத்தப்பட்ட கட்சிச் சின்னத்தை அடுத்தடுத்த தேர்தல்களில் பயன்படுத்துவதில் வரையறைகளை விதிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் பொதுச்சபை எதிர்பார்த்தது. ஆனால் நடைமுறையில் கட்சிகள் அதற்கு முழுமையாகத் தயாராக இருக்கவில்லை. அந்த வரையறைகளில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்று கட்சிகள் எதிர்பார்த்தன.
இப்படிப்பட்டதோர் பின்னணியில்,சுயேட்சையாக ஒரு முன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் போட்டியிடும் பொழுது அங்கே கட்சிச் சின்னத்துக்கான தேவை இருக்காது. இந்த அடிப்படையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை போட்டியில் இறக்கலாமா என்றும் சிந்திக்கப்பட்டது.
எனவே ஜனாதிபதித் தேர்தல் பொறுத்து ஏதோ ஒரு விதத்தில் கட்சிகளோடும் அரசியல்வாதிகளோடும் தொடர்புபடுத்தித்தான் முடிவுகளை எடுக்க வேண்டிய சட்ட யதார்த்தம் ஒன்று உண்டு.
இவை எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்து ஒரு பொது வேட்பாளரை கண்டுபிடிப்பதற்கு சில கிழமைகள் எடுத்தன. ஊடகங்கள் எழுதுவதுபோல பல மாதங்கள் எடுக்கவில்லை. ஏனென்றால் தமிழ் மக்கள் பொதுச்சபை முதலில் வவுனியாவை கூடியது ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியாகும். அதன் பின் கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை இறுதியாக்கியது கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி ஆகும். அந்த உடன்படிக்கை கைச்சாத்தாகியது ஜூலை 22ஆம் திகதியாகும்.அப்படிப் பார்த்தால் பொதுக் கட்டமைப்பு ஒரு ஜனாதிபதி வேட்பாளரை தேடத்தொடங்கி பதினெட்டு நாட்கள்தான் கழிந்திருந்தன.ஒரு மக்கள் கூட்டத்தின் பொது நிலைப்பாட்டை முக்கியத்துவப்படுத்தி அப்பொது நிலைப்பாட்டின் கீழ் மக்களை ஒன்றிணைக்க வேண்டிய ஒரு ஆளுமையைத் தேடுவதற்கு பதினெட்டு மட்டுமல்ல பதினெட்டு மாதங்களை எடுத்துக் கொண்டாலும் தவறில்லை. ஆனால் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில் அவ்வாறு வேட்பாளரைத் தேடுவதில் காலவரையறைகள் இருந்தன.எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துத்தான் ஒரு பொது வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டியிருந்தது.அப்பொது வேட்பாளரை ஒரு பொது நிலைப்பாட்டின் வெற்றியாக மாற்ற வேண்டியது கட்சிகளுடையதும் மக்கள் அமைப்பினுடையதும் உழைப்பில் தங்கியிருக்கின்றது.