சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக இருந்து ஓய்வு பெற்றவர் பொன்.மாணிக்கவேல். இவர் கடந்த 1989-ல் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பி.யாகத் தொடங்கி, 1996-ல் ஐபிஎஸ் ஆக பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்ட எஸ்.பி., உளவுப்பிரிவு டி.ஜ.ஜி., சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர், ரயில்வே ஐ.ஜி., சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. என பல பொறுப்புகளில் இருந்து பின்னர் 2018-ல் ஓய்வு பெற்றார். இவர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக பணியாற்றியபோது சிலை கடத்தல்காரர்களுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டதாக அதே பிரிவில் பணியாற்றி இடைநீக்கம் செய்யப்பட்ட காதர் பாட்ஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018ல் வழக்குத் தொடர்ந்திருந்தார். தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சிபிஐ கடந்த வருடம் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் சென்னை பாலவாக்கத்தில் பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை காலை முதல் நடைபெற்றது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.