(09-08-2024)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கிளினிக் சேவையை பெற்றுக் கொள்ளச் சென்ற நோயாளர்கள் 09-08-2024 தினம் வெள்ளிக்கிழமை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
-கிளினிக் சேவையை பெற்றுக் கொள்ள9ம் திதி அன்று வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி முதல் நோயாளர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் கிளினிக் சேவையை பெற்றுக் கொள்ளும் இடத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கே வைத்தியரை சந்திப்பதற்கு வருகின்ற நோயாளிகளுக்கு இலக்கம் (டோக்கன்) வழங்கப்படுகிறது.அந்த இலக்கங்களின் அடிப்படையிலே நோயாளர்கள் வைத்தியரை சந்திக்க முடியும்.
வழமையாக குறித்த கிளினிக் சேவை நிலையத்தில் 3 வைத்தியர்கள் கடமையில் இருப்பது வழமை.இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஒரு வைத்தியர் மட்டும் இருந்துள்ளார்.
இன்றைய தினம் நூற்றுக்கணக்கானோர் கிளினிக் சேவையை பெற்றுக் கொள்ள வருகை தந்தனர்.எனினும் குறித்த வைத்தியர் ஒருவரினால் அனைவரையும் உரிய முறையில் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
நோயாளர்கள் பல மணி நேரம் காலை உணவு இன்றி நின்றுள்ளனர்.பலர் கிளினிக் சேவையை பெற்றுக் கொள்ளாது திரும்பிச் சென்றுள்ளனர்.
எனவே இவ்விடயம் குறித்து வைத்தியசாலை அத்தியட்சகர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.