உதயன் சிறப்பு புலனாய்வு கட்டுரை
நடராசா லோகதயாளன்
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 2024-07-28 அன்று விடுதியில் அனுமதிக்கப்பட்டு பகல் 13.20 மணிக்கு உயிரிழந்த திருமதி மரியராஜ் சிந்துஜாவின் மரணத்திற்கு காரணமான ஐவருக்கு எதிராக திணைக்கள ரீதியிலான குற்றப்பத்திரம் அண்மையில் இரகசியமாக சுகாதார அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளம் தாயார் அதிகாலை 2.05ற்கு நோயாளர் காவு வண்டி மூலம் மாவட்ட வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார். வெளிநோயாளர் பிரிவில் பார்வையிட்டு விசாரணைகள் பூர்த்தி செய்து 2.30 மணிக்கு 6ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விடுதயில் அனுமதிக்கப்படும்போது அவருக்கு குருதி அழுத்தம் (பிறசர்) 100/50 என காட்டப்பட்டுள்ளது. விடுதியில் அந்த நேரம் இரு தாதியர்களும், கடமையில் இருந்துள்ளனர். கடமையில் இருந்தவர்கள் பொறுப்பு வைத்தியருக்கு தொலைபேசி மூலம் அதாவது ஒன்கோல் டொக்டருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.
வைத்தியர் விடயத்தை கேட்டபின்பு ”பிறசர் நோமல்தானே பிறசர் மற்றும் பல்ஸ் பார்க்கும் கருவிகளை பொருத்தி மொனிற்ற பன்னுங்கோ காலையில் வாரன்” என பதிலளித்துள்ளார். இதற்கமைய இரண்டும் பொருத்தப்பட்டுள்ளது. வேறு எந்தக் கண்காணிப்போ அல்லது பராமரிப்போ அங்கே மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் பகல் 1.20 மணிக்கு தாயார் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணையை மேறகொண்டு அந்த விசாரணையின் அடிப்படையில் குற்றப்பத்திரம் தயாரிக்கப்பட்டு வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட குற்றப் பத்திரத்தில் ஒன்கோலில் இருந்த டொக்டர், விடுதியில் பணியில் இருந்த இரு தாதியர் மற்றும் இரு மில்கவை ஆகிய 5 பேருக்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தயார் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரத்தில் :
01. சுகாதார அமைச்சின் செயலாளரின் சுற்று நிரூபத்தின்படி வைத்தியர் நேரில் செல்ல வேண்டும் என்ற விடயம் மீறப்பட்டுள்ளது.
விடுதியில் அனுமதிக்கப்பட்ட பின்பு அதிகாலை 2.30 மணி முதல் காலை 7 மணிவரை எந்தவொரு பரிசோதனைக்கும் உட்படுத்தவில்லை.
பரிசோதனைக்கு உட்படுத்தாமலேயே அதிகாலை 2.30, 3.00 , 5.00, 7.00 மணி ஆகிய நான்கு தடவை நோயாளியை பார்வையிட்டதாக போலி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
6.45 ற்கு சிறுவர் வைத்தியர் பார்வையிட்டு அறிக்கையிட்டு மகப்பேற்று நிபுணருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன்போதும் வோட் டொக்டர் எங்க என மகப்பேற்று நிபுணர் கேட்டுள்ளார்.
மரணத்தின் பின் போலி அறிக்கையொன்று மருத்துவர் தயாரித்துள்ளார்.
உயிரிழந்த இளம் தாயார் தனது கணவருடன் 6.40ற்கு பேசியுள்ளார். அதன்போது என்னை இதுவரை யாரும் பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
5.45 மணிக்கு ஓ.பி.டி டொக்டர் வோட் டொக்டருக்கு கோல் பண்ணி என்ன மாதரி என்றபோது நோமல் என வைத்தியர் கூறியுள்ளார்.
இரத்தப்போக்கை பரிசோதிக்க வேண்டியது மில்க்வை பொறுப்பு, அது செய்யாமல் பரிசோதணை செய்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வைத்தியர் மீது 4 குற்றச் சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில்,
1. 27.07.2024 ஆம் திகதி இரவுக் கடமையில் ஒன் கோல் வைத்திய உத்தியோகத்தராக கடமையாற்றிக்கொண்டிருந்த தாதிய உத்தியோகத்தர் அழைப்பினை ஏற்படுத்தி திருமதி. ம.சிந்துஜா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தமையினை தெரியப்படுத்தியிருந்தும் 28.07.2024 ஆம் திகதி காலை அண்ணளவாக 07.00 மணிவரை குறித்த நோயாளிக்கான சிகிச்சை எதனையும் வழங்காது இருந்தமை மூலமாக குறித்த நோயாளியின் மரணத்திற்கு காரணமாக இருந்தமை. தாபன விதிக்கோவையின் தொகுதி II இன் அத்தியாயம் XLVIII இல் அரச அரச அலுவலகர்களால் புரியக்கூடிய குற்றங்கள் பற்றிய முதலாவது அட்டவணையில் காட்டப்படும் கவனயீனத்தால் அல்லது ஊக்கமின்மையினால் அல்லது வேண்டுமென்று, அரசாங்கத்தின் உரிமைகளுக்கு கேடுவிளையும் வகையில் செயற்படுதல் அல்லது அவ்வாறு செயற்படுவதற்கு இடமளித்தல மற்றும் அரச சேவை அவமானப்படும் வகையில் செயற்பட்டமை போன்ற குற்றங்களுக்குள் வரையறை செய்ய முடியும்.
2. குறித்த நோயாளியினை பார்வையிடாமல் விட்டதுடன் மேல் அதிகாரிகளுக்கு நோயாளியின் உடல் நிலமை மோசமடையும் வரை அறிவிக்காமல் இருந்தமை ஆகியன தாபன விதிக்கோவையின் தொகுதி II இன் அத்தியாயம் XLVIII இல் அரச அரச அலுவலகர்களால் புரியக்கூடிய குற்றங்கள் பற்றிய முதலாவது அட்டவணையில் காட்டப்படும் சிரேஷ்ட அலுவலர் ஒருவர் விடுக்கும் சட்டரீதியான கட்டளைகளை செயற்படுத்த மறுத்தல் அல்லது கீழ்படிவின்மை அல்லது அலட்சியப்படுத்தல் போன்ற குற்றங்களுக்குள் வரையறை செய்ய முடியும்.
3. குறித்த நோயாளி வெளி நோயாளர் பிரிவில் அனுமதிக்கப்படும் போது அனுமதிக்கும் அலுவலகரினால் “MO TO SEE STAT” எனும் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தமையினை தங்களுக்கு தகவல் வழங்கிய தாதிய உத்தியோகத்தர் கூறியும் அந் நோயாளியின் நோய் நிலைமையானது அவசரமாக பார்வையிட வேண்டியதாக இருந்த போதிலும் தாங்கள் பார்வையிடாமல் தவறியமை பொதுச் சுற்றறிக்கைக் கடித இலக்கம் 45/93 திகதி 27.10.1993 சுகாதார அமைச்சின் செயலாளர் அவர்களினால் வெளியிடப்பட்ட ஆகிய விடயங்கள் தங்களால் மீறப்பட்டுள்ளன மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரினால் 15.12.2023 வெளியிடப்பட்ட அறிவித்தல் ஆகியவற்றை மீறியமையால் தாங்கள் தாபன விதிக்கோவையின் தொகுதி II இன் அத்தியாயம் XLVIII இல் அரச அரச அலுவலகர்களால் புரியக்கூடிய குற்றங்கள் பற்றிய முதலாவது அட்டவணையில் காட்டப்படும் தாபனவிதிக் கோவை ஏற்பாடுகள் நிதி ஒழுங்குவிதிகள் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகள் திறைசேரி சுற்றறிக்கைகளை மீறுவது அல்லது வேண்டுமென்று இல்லது கவனயீனமாக அலட்சியப்படுத்துவது அல்லது காணமல் போகும் வண்ணம் நடந்துகொள்ளல். மற்றும் குறிறங்களைப் புரிதல் அல்லது புரிவதற்கு உடைந்தையாயிருத்தல் அல்லது உதவிபுரிதல் அல்லது அவ்வாறு புரிவதற்கு இடமளித்தல் குற்றங்களுக்குள் வரையறை செய்ய முடியும்.
4. வைத்தியசாலையிலிருந்து தொலைபேசி மூலமாக தங்களை தொடர்பு கொண்டு குறித்த நோயாளியின் நோய் நிலைமை தொடர்பாக தங்களுக்கு தெரியப்ப்படுத்தியிருந்தும் தாங்கள் உடனடியாக எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது தாபன விதிக்கோவையின் தொகுதி II இன் அத்தியாயம் XLVIII இன் பிரகாரம் குற்றமிளைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13 ) அன்று, மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்மணிக்கு நீதிகேட்டு பல்தரப்பினர் பெரும் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தியும், வாயை கருப்புப் பட்டிகள் கொண்டு மூடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.