தாய்லாந்து அரசின் அமைச்சரவையில் பிச்சித் சைபான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிச்சித் சைபான் கடந்த 2008-ம் ஆண்டு, நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றவர் ஆவார். அவரை அமைச்சராக நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிச்சித் சைபான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், பிச்சித் சைபானை அமைச்சராக நியமிக்க பரிந்துரை செய்த தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவிநீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அமைச்சரவை உறுப்பினர்களை தகுதி அடிப்படையில் நியமிக்கும் பொறுப்பு பிரதமருக்கு இருப்பதாகவும், பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் நடத்தை விதிகளை மீறிவிட்டார் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. அமைச்சராக நியமிக்கப்பட்ட பிச்சித் சைபான், 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றவர் என்பது மட்டுமின்றி, உச்சநீதிமன்றம் அவரை நன்னடத்தை இல்லாதவர் என்று கூறியிருப்பதாக அரசியலமைப்பு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தற்போது ஸ்ரெத்தா தவிசின் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமரை நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் வரை அமைச்சரவை காபந்து அடிப்படையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.