2006-ம் ஆண்டு வெளியான அனுராக் காஷ்யபின் ‘கேங்ஸ்டர்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கங்கனா ரனாவத் 4 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 2019ல் ‘மணிகர்னிகா ஜான்சி ராணி’ படத்தினை கிறிஸ் ஜகர்லாமுடி உடன் இணைந்து இயக்கியுள்ளார். தற்போது எமர்ஜென்சி படத்தை முழுக்க முழுக்க அவரே இயக்கியுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளப் படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ள கங்கனா ரனாவத், அவரே இந்தப் படத்தை இயக்கி, தயாரித்துள்ளார் என்பது கூடுதல் விஷயம் ஆகும். ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் கங்கனா ரனாவத் வெற்றிபெற்று எம்.பியான பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதாலும், இதற்கு முன்னர் நடித்தத் திரைப்படங்களின் தொடர் தோல்விகளாலும் இந்தப் படம் வெற்றியடையப் பெரிதும் நம்பிக்கையுடன் காத்து இருக்கிறார் கங்கனா ரனாவத். இந்தநிலையில், எமர்ஜென்சி திரைப்படம் செப்.6 -ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கங்கனா ரனாவத் பேசியதாவது: ஷாருக், அமிர், சல்மான் என மூவரையும் தனது தயாரிப்பு, இயக்கத்தில் நடிக்க வைக்க மிகுந்த ஆசையாக உள்ளது.
நன்றாக நடிக்கவும் அவர்களை அழகாக திரையில் காண்பிக்கவும் ஆசை. அவர்களால் மிகப்பெரிய மக்கள் கூட்டத்துடன் ஒன்றிணைய முடியும். அதனால் அவர்களால் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்க முடியும். அவர்கள் திறமைசாலிகள் மட்டுமல்ல அவர்களால் இந்தி சினிமாவுக்கு நல்ல வருமானமும் கிடைக்கின்றன. அதற்காக அவர்களுக்கு மிகவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நான் பல நடிகர்களுடன் வேலை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த இர்பான் கானை இயக்க முடியாமல் போனது வருத்தம்தான். அவரை எப்போதும் நான் மிஸ் செய்கிறேன் என்றார். 2011-ம் ஆண்டு சல்மான்கான் நடித்த ரெடி படத்தில் கேமியோ ரோலில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.