– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
கடந்த 11 ஆம் தேதி வவுனியாவில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூடியது. அதில் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.அதாவது மீண்டும் முடிவு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. பெரும்பாலான ஜனாதிபதி வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியிருக்கும் ஒரு பின்னணியில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரு பெரிய கட்சி இப்பொழுதும் முடிவெடுக்க முடியாமல் இருக்கிறது என்பது எதைக் காட்டுகின்றது?
மத்திய குழு கூட்டம் முடிந்தபின் ஊடகங்களுக்கு பதில் கூறிய சுமந்திரன், தமிழ் அரசியலுக்கு தலைமை தாங்கும் கட்சி தாங்களே என்ற பொருள்படக் கூறினார். உள்ளதில் பெரிய கட்சி என்பதனால் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் ஒரு கட்சி என்பது ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு நான்கே நாட்கள் இருந்த ஒரு காலச் சூழலில் எப்படி முடிவெடுக்க வேண்டும் ?
தலைமைப் பண்பு என்பது உறுதியாக முடிவெடுத்து மக்களை வழி நடத்துவது.
மாறாக முடிவு எடுப்பதை ஒத்திப்போடுவது அல்ல. இந்தியாவின் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் தொடர்பாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் முடிவு எடுப்பதை எப்பொழுதும் ஒத்திப் போடுவார் என்று. ஆனால் இந்திய பொருளாதாரத்தை திறந்த சந்தையை நோக்கித் திறந்து விட்டதில் அவருடைய பங்கு பெரியது. அங்கே அவர் சரியாக துணிச்சலாக முடிவை எடுத்தார். எனினும் கட்சிக்குள்ளும் நாட்டின் ஐக்கியத்தைக் கட்டிக்காக்கும் விடயங்களிலும் அவர் எடுத்த முடிவுகள் விமர்சனத்திற்குரியவை. குறிப்பாக பாபர் மசூதி விடயத்தில் அவர் முடிவெடுக்காமல் ஒத்திப் போட்டதன் விளைவாகத்தான் இந்து மதத் தீவிரவாதிகள் பாபர் மசூதியை இடிக்க முடிந்தது என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் நரசிம்மராவின் பொருளாதாரக் கொள்கைகளை போற்றுவோர், அவருடையப முடிவெடுக்கும் பண்பை வேறு விதமாக வியாக்கியானம் செய்வார்கள். முடிவெடுக்காமல் ஒத்திப் போடுவது ஓர் உத்திதான் என்று அவர்கள் கூறுவார்கள்.
தமிழரசுக் கட்சி பொது வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்காமல் ஒத்தி வைப்பது என்பது அதன் தலைமைப் பண்பின் சிறப்பியல்பா? அல்லது அதன் தலைமை சிதைந்து போய் இருப்பதன் விளைவா?
சந்தேகமே இல்லை. கட்சித் தலைமை சிதைந்து போய் இருப்பதனால்தான் அவர்களால் முடிவெடுக்க முடியவில்லை. கட்சிக்குள் இரண்டு அணிகள் உண்டு. இந்த இரண்டு அணிகள் கட்சிக்குள் மேலெழுந்தமை என்பது தலைமைத்துவத்தின் இயலாமைதான். எனவே கட்சி முடிவெடுக்க முடியாமல் தத்தளிக்கிறது என்பது அதன் தலைமைத்துவ தோல்வியை தவிர, அது ஒரு வெற்றிகரமான உத்தி கிடையாது.
தமிழ் மக்களுக்கு தலைமை தாங்குவது என்பது முடிவுகளை ஒத்திப் போடுவது அல்ல. பொருத்தமான நேரத்தில் பொருத்தமான துணிச்சலான தீர்க்கதரிசனமான முடிவுகளை எடுக்க வேண்டும். உதாரணமாக 2009 ஆம் ஆண்டுக்குப் பின் வந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தர் ஒரு தமிழ் பொது வேட்பாளராக நின்றிருந்தால், தமிழ் அரசியலின் போக்கே வேறு திசையில் சென்றிருக்கும். மாறாக யார் இன அழிப்பைச் செய்தவர்கள் என்று குற்றம் சாட்டினார்களோ, அதே ராஜபக்சகளின் அரசியல் தீர்மானங்களை யுத்தகளத்தில் முன்னெடுத்த ஒரு தளபதிக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கேடடார்கள். அப்பொழுதே தமிழரசு கட்சி அதன் தலைமைத்துவத்தில் சறுக்கிவிட்டது. நடந்தது இன அழிப்பு என்று கூறிவிட்டு அந்த இன அழிப்பு யுத்தத்திற்கு தலைமை தாங்கிய ஒரு தளபதிக்கு வாக்களித்தால் பிறகு எப்படி இன அழிப்புக்கு எதிராக நீதி கேட்பது?
இந்த அரசியல் முரண்பாட்டுக்கு பொறுப்பு சம்பந்தரின் தலைமைத்துவந்தான்.
சம்பந்தரின் வழி தோற்றுவிட்டது என்பதைத்தான் அவருடைய பூத உடலுக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த மரியாதை உணர்த்தியது. சம்பந்தரின் வழி தோற்றுவிட்டது என்பதைத்தான் அவர் இறந்த பொழுது அவருடைய கட்சி இரண்டாக உடைந்து இருந்தமை நிரூபித்தது. எனவே இப்பொழுது தமிழரசு கட்சி முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவது என்பது தலைமைத்துவ உத்தி அல்ல. அது கட்சியின் தலைமைத்துவம் பலமாக இல்லை என்பதன் விளைவு.
தென்னிலங்கை கட்சிகள் தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்ட பின் தமிழரசு கட்சி முடிவெடுக்கும் என்று கூறுவதே தலைமைத்துவத்தின் பலவீனம்தான். எதிர்த் தரப்பு என்ன முடிவெடுக்கும் என்பதை பார்த்துத் தான் முடிவெடுப்பது. அதே சமயம் எதிர்த் தரப்பு சமஸ்ரியைத் தராது என்பது எல்லோருக்கும் தெளிவாக தெரிகிறது. அவர்கள் சமஸ்ரியைத் தர மாட்டார்கள் என்று நன்கு விளங்கிக் கொண்ட பின்னரும் அவர்களுக்காக காத்திருப்பது என்பது எதைக் காட்டுகின்றது? சமஷ்டி அல்லாத வேறு ஏதோ ஒன்றுக்கு இறங்கிப் போகப் போகிறோம் என்பதையா?
அவர்கள் யாருமே சமஸ்ரித் தீர்வுக்கு உடன்படத் தயாரில்லை என்றால், அதன் பின் கட்சி என்ன முடிவு எடுக்கும்? தேர்தலைப் பரிஷ்கரிக்குமா? அல்லது பொது வேட்பாளரை ஆதரிக்குமா?
பஸ்கரிப்பது தவறு என்று ஏற்கனவே சுமந்திரன் கூறியிருக்கிறார்.அப்படியென்றால் பொது வேட்பாளரை ஆதரிப்பதைத் தவிர வேறு தெரிவு இல்லை. அல்லது அவர்கள் தரக்கூடியவற்றுள் பெறக்கூடியவற்றை எப்படிப் பெறலாம் என்று டீலுக்குப் போகவா காத்திருக்கிறார்கள்? இதில் சிறீதரன் அணி அவ்வாறான ஒரு டீலுக்கு போக தயாரா?
கட்சியின் மத்திய குழு கூடுவதற்கு முதல் நாள் சனிக்கிழமை கிளிநொச்சியில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அங்குள்ள விவசாய அமைப்புகள் அப் பொதுதுக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தின. அதில் தமிழ் மக்கள் பொதுச்சபையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இறுதியில் பேசினார். அவருடைய உரை மிகத் தெளிவாக இருந்தது. அதில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளரை நியாயப்படுத்தி பேசினார்.
கடந்த மாதம் 22 ஆம் தேதி ரணில் விக்கிரமசிங்க ஒரு தனியார் விருந்தினர் விடுதியில் மாவை சேனாதிராஜாவை சந்தித்தது பற்றியும்,மாவையிடம் அவர் ஓர் ஆவணத்தை கையளித்தது பற்றியும் அதில் அவர் குறிப்பிட்டார்.அந்த ஆவணத்தில் ஒரு பிரதியை மாவை சேனாதிராஜா தனக்குத் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த ஆவணத்தில் 13வது திருத்தத்தை அமல்படுத்துவதை பற்றிய அம்சங்கள் காணப்பட்டதாகக் கூறிய அவர், முக்கியமாக போலீஸ் அதிகாரத்தை உடனடிக்குத் தர முடியாது என்றும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் பின் நாடாளுமன்றத்தில் அதைத் தீர்மானிக்கலாம் என்றும் ரணில் கூறியதாக சிறீதரன் கூறினார். அது பதிமூன்று மைனஸ் என்று அவர் கூறினார்.
ரணில் விக்கிரமசிங்க தன்னை சந்திக்கும் தமிழ்க் கட்சித் தலைவர்களிடம் அந்த தீர்வைத்தான் இப்பொழுது முன்வைத்து வருகிறார். 13 மைனஸ். அப்படியென்றால், சுமந்திரன் அணி 13 மைனஸ் இற்குத் தயாரா? அல்லது சஜித் பிரேமதாச அண்மையில் தன்னை சந்தித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தது போல முழுமையாக பதின்மூன்று என்ற தீர்வுக்குத் தயாரா ?அல்லது மகிந்த ஏற்கனவே கூறியது போல 13 பிளஸ் இற்குத் தயாரா?
கிடைக்கப்பெறும் தகவல்களின்படி தென்னிலங்கையில் உள்ள பிரதான வேட்பாளர்கள் தமிழ் மக்களுக்கு தரக்கூடிய வாக்குறுதிகள் எவையும் 13 பிளஸ் என்ற வரையறையைத் தாண்டிப் போகக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த லட்சணத்தில் யாரிடமிருந்து சமஸ்ரி வரும் என்று சமஷ்டிக் கட்சி காத்திருக்கின்றது? அல்லது இக்கேள்வியை மேலும் கூர்மையாகக் கேட்டால், சமஸ்ரியை யாராவது ஒரு சிங்களத் தலைவர் தங்கத் தட்டில் வைத்து தருவார் என்று இப்பொழுதும் சமஷ்டிக் கட்சி நம்புகின்றதா? போராடாமல் சமஸ்டி கிடைக்கும் என்று சமஸ்ரிக் கட்சி நம்புகின்றதா? தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவே அவ்வாறான ஒரு போராட்டத்தின் ஒரு பகுதிதான் என்பதனை சமஸ்ரிக் கட்சி ஏற்றுக் கொள்கிறதா?