”இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்த தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிப்போம் ”என்ற தமிழரசுக்கட்சியின் அறிவிப்பினால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் அல்லது ஜனாதிபதித்தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும்.தமிழரசுக்கட்சிக்கு இந்த இரு தெரிவுகள் மட்டுமே உள்ளன”
கே.பாலா
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக் கதிரையை கைப்பற்றுவதற்காக இம்முறை பல வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதுடன் தமது வாக்கு வங்கியை பலப்படுத்தும் முயற்சிகளிலும் ஆதரவுத்தளத்தை அதிகரிக்கும் அணி திரட்டல்களிலும் தீவிரம் காட்டி வரும் நிலையில் பிரதான இரு வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுடனும் பல கட்சிகள் சங்கமித்து வருகின்றன.
அத்துடன் என்றுமில்லாதவகையில் தமிழ் தேசியக்கட்சிகள் .சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் பொதுக்கட்டமைப்பு என்ற ஓரணியாக இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் ”தமிழ் பொது வேட்பாளர்” ஒருவரை களமிறக்கியுள்ளதுடன் அவருக்கான ஆதரவுத்தளத்தை அதிகரித்து அதன்மூலம் அரசுக்கும் சர்வதேசத்துக்கும் தமிழ் மக்கள் தொடர்பில் ஒரு செய்தியை தெரிவிக்க முனைப்புக்காட்டி நிற்கின்றது.
இவ்வாறான நிலையில் தமிழ் தேசியக்கட்சிகளின் தாய்க்கட்சி என வர்ணிக்கப்படும் இலங்கை தமிழரசுக்கட்சியிலுள்ள ”சுமந்திரன் குழு ” இந்த தமிழ் பொது வேட்பாளரை கடுமையாக எதிர்த்து வருவதுடன் பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரைத்தான் ஆதரிக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும் நிலையில் அதேகட்சியில் உள்ள தமிழ் தேசிய உணர்வும் தளராத கொள்கையும் கொண்ட ”ஸ்ரீதரன் அணி” தமிழ் பொதுவேட்பாளரை தீவிரமாக ஆதரிக்கின்றது. இதனால் தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி பிளவடைந்திருக்கின்றது.
இந்த தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் சுமந்திரன் குழுவுக்கும் ஸ்ரீதரன் அணிக்குமிடையில் நடந்து வந்த பனிப்போரில் ஸ்ரீதரன் அணி வைத்த பொறியில் சுமந்திரன் குழு சிக்கியுள்ளது என்பதனை தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என எடுக்கப்பட்ட தீர்மானம் வெளிப்படுத்தி நிற்கின்றது.
தமிழ் தேசியக் கட்சிகளினதும் தமிழ் மக்களினதும் ஒற்றுமை,பலத்தைக்காட்டி அதன்மூலம் இலங்கை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் ஒரு செய்தியை தெரிவிக்க தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை .எனவே நான் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றேன் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டு உள்”வீட்டு” சதியின் மூலம் பதவி ஏற்கவிடாது தடுக்கப்பட்டுள்ள ஸ்ரீதரன் பகிரங்கமாக அறிவித்துள்ளார் .
அதேநேரம் தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயம். இதன்மூலம் எதனையும் சாதிக்க முடியாது. ஆகவே எமது நிபந்தனைகளை ஏற்கும் சிங்கள வேட்பாளர் ஒருவரையே ஆதரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்து தமிழ் பொது வேட்பாளருக்கு எதிரான பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறான தமிழரசுக்கட்சியின் பிளவுகளுக்கு மத்தியில் தமிழரசுக்கட்சியிலிருந்தே அதன் முக்கியஸ்தர்களில் ஒருவரும் கிழக்கு மாகாணத்தின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான பா. அரியநேத்திரனை தமிழ் பொது வேட்பாளராக தெரிவு செய்து சுமந்திரன் குழுவுக்கு முதல் ”செக்”வைத்தது தமிழ் பொதுக்கட்டமைப்பு.
அடுத்ததாக , பொதுவேட்பாளர் விடயத்தினை எதிர்ப்பவா்கள் என்ன காரணத்திற்காக எதிர்க்கின்றனர் என்பதையும் யாரை இந்த தேர்தலில் ஆதரிக்கின்றனர் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும் .அத்துடன் தேர்தலில் போட்டியிடும் பிரதான சிங்கள வேட்பாளர்களில் எவரேனும் இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வழங்குவதாக எழுத்து பூர்வமாக உறுதியளிக்க முன்வருவார்களா எனக்கேட்டு சுமந்திரன் குழுவுக்கு அடுத்த ”செக்’ வைத்தார் ஸ்ரீதரன் எம்.பி.
இவ்வாறான சூழலில் தான் தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு இந்த தமிழ் பொது வேட்பாளர் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டன .இதன்போது சுமந்திரன் குழு கூட்டத்தில் மிகவும் அநாகரீகமாகவும் ஆக்ரோஷமாகவும் பொது வேட்பாளரை எதிர்த்தபோதும் ஸ்ரீதரன் அணியின் பொறியில் சிக்குண்டது. அது எவ்வாறு என்று பார்ப்போம்.
இந்த மத்திய குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சுமந்திரன் எம்.பி. ஊடகங்களுக்கு அறிவிக்கையில், ”இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்த தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிப்போம் என்ற கருத்து கூட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது ”என்று தெரிவித்தார்
அடுத்ததாக தமிழரசுக்கட்சியுடன் கலந்தாலோசிக்காது தமிழ் பொது வேட்பாளராக நிற்க இணங்கிய தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு உறுப்பினரான அரியநேத்திரனிடம் விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டு ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுவரை கட்சி நிகழ்வுகள் எவற்றிலும் அவர் பங்கேற்க அழைப்பு விடுப்பதில்லை என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது . அதேவேளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவா எதிர்ப்பா என்ற தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்
அதேவேளை ஜனாதிபதி வேட்பாளர்களில் பிரதானமான இருவரான ரணில் விக்கிரமசிங்க ,சஜித் பிரேமதாச ஆகியோர் யாழ்ப்பாணம் வந்து எம்மை சந்தித்து பேசியபோது அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன் வைத்த விடயங்கள் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளை பூர்த்திசெய்யவில்லை . அதனை நாம் அவர்களுக்கும் சொல்லியுள்ளோம் என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.
ஸ்ரீதரன் அணியின் வற்புறுத்தலினால்தான் ”இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்திலும்சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்த தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிப்போம்” என்ற விடயம் தமிழரசுக்கட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு இரு தெரிவுகள் மட்டுமே உள்ளன. ஒன்று தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். இரண்டாவது ஜனாதிபதித்தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும். ஏனெனில் ‘இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயார் ”என எந்தவொரு சிங்கள வேட்பாளரும் அறிவிக்கப் போவதுமில்லை .தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கபோவதுமில்லை.ஆகவே சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் எவருக்கும் தமிழரசுக்கட்சியினால் ஆதரவளிக்க முடியாது.
‘இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயார் ”என தமிழ் பொது வேட்பாளரினால் மட்டும் தான் அறிவிக்க முடியும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படும். அப்படியானால் தமிழரசுக்கட்சி தமிழ் பொது வேட்பாளரைத்தான் ஆதரிக்க வேண்டும். சிங்கள வேட்பாளர்களை ஆதரிக்கமுடியாத நிலையில் தமிழ் பொது வேட்பாளரையும் ஆதரிக்க தமிழரசுக்கட்சி மறுத்தால் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிப்பது ஒன்றுதான் தமிழரசுக்கட்சிக்குள்ள தெரிவு.
இந்த இரண்டில் ஒன்றை செய்யாது தமது ”இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்த தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிப்போம்” என்ற நிலைப்பாட்டுக்கு விரோதமாக சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழரசுக்கட்சி ஆதரவளித்தால் தமிழரசுக்கட்சியிலுள்ள சுமந்திரன் குழுவின்”பேரினவாத ஆதரவு முகம் ”வெளிப்பட்டு விடும்.
அதனைத் தவிர்ப்பதற்காக இறுதியில் தமிழரசுக்கட்சி இரா.சம்பந்தனின் ”தமிழ் மக்கள் தமக்கு விரும்பிய ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும்.இதுதமிழரசுக்கட்சிக்கும் பொருந்தும்”என்ற வழக்கமான தந்திரத்தையே கையில் எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.