54- வது பெருமைக்குரிய கேரளம் மாநில திரைப்பட விருதுக்கான பட்டியலை திருவனந்தபுரத்தில் கேரள கலாச்சார விவகாரதுறை அமைச்சர் சஜி செரியன் வெளியிட்டார். சிறந்த நடிகருக்கான விருதை பிரித்விராஜ் ஆடுஜீவிதம் திரைப்படத்திற்காக வென்றுள்ளார். இந்தாண்டு பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ், அமலாபால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஆடு ஜீவிதம். இப்படத்திற்காக மிக கடுமையான உழைப்பை வெளிப்படுத்தி நடித்திருப்பார் பிரித்விராஜ். இப்படத்திற்காக உடல் எடை குறைத்து, உண்மையில் அந்த பாலைவனத்தில் வாழ்ந்த ஒரு மனிதனாக நடித்து இருப்பார்.
திரைப்படம் தற்பொழுது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை `உள்ளொழுக்கு’ படத்திற்காக ஊர்வசியும், தடவு திரைப்படத்திற்காக பீனா ஆர் வென்றுள்ளனர். சில மாதங்களுக்கு முன் ஊர்வசி மற்றும் பார்வதி நடிப்பில் வெளியான திரைப்படம் உள்ளொழுக்கு. மாமியார் மற்றும் மருமகள் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தனர். இப்படம் அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருதை ஆடுஜீவிதம் திரைப்படத்திற்காக பிளெஸ்ஸி வென்றுள்ளார். சிறந்த திரைப்படத்திற்கான விருதை மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த காதல் தி கோர் திரைப்படம் வென்றுள்ளது. ஆடு ஜீவிதம் திரைப்படம் மொத்தம் 9 மாநில விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.