கதிரோட்டம்- 16-08-2024 வெள்ளிக்கிழமை
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளதை நேற்று இடம்பெற்ற வேட்பாளர்களின் மனுத்தாக்கல் வைபவம் எடுத்துக்காட்டுகின்றது. இந்த தேர்தலில் தமிழர்களாக நாம் பெருமைப்படும் வகையில் முதலாவது தடவையாக ஒரு பொது வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் போட்டியில் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எமது ஆசிரிய பீடத்தின் வாழ்த்துக்கள் உரித்தாகுக!
இந்த தேர்தலில் முன்னர் மக்கள் ஆதரவு இல்லாமல் கபடத்தனமாக அந்த ‘ஜனாதிபதி’ ஆசனத்தில் அமர்ந்திருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒரு ‘அரசியல் அனாதையாக’ சுயேட்சையாக போட்டியிடுவது அவரது நிலைப்பாட்டை நன்கு காட்டுகின்றது அல்லவா? ரணில் விக்கிரமசிங்க இலங்கை என்னும் தேசத்திற்குரியவர் அல்ல என்பதையும் இன்னொரு தேசம் தான் அவரைக் கட்டுப்படுத்திக் கொண்டுள்ளது என்பதும் இங்கு வெளிச்சமாகத் தெரிகின்றது.
எமது தமிழ் பேசும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும் சிந்தனைகளும் விசித்திரமாகத் தெரிகின்றன. இந்த தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளரிடமிருந்து அதிகளவு ‘கறந்து’ எடுக்கலாம் என்பதையே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் எண்ணமாக இருந்துள்ளது. இதனால்தான் அவர்கள் தங்கள் பதவியின் பலத்தை ஒரு தமிழ் பொது வேட்பாளருக்காக அர்ப்பணிக்க முன்வரவில்லை. எமது பொது வேட்பாளர் அரியநேந்திரன் அவர்களை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. இவ்வாறனவர்கள் எமக்கு எதிர்கால மக்கள் பிரதிநிதிகளாக அவசியம் தேவைதானா என்பதை தமிழ் பேசும் வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுமார் நாட்பது வேட்பாளர்களில் ‘இனப்படுகொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய மகிந்தாவின் புதல்வன் நாமல் என்னும் இளம் ‘ஊழல்வாதி’யால் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல, தென்னிலங்கை மக்களுக்கு ஒன்றும் கிட்டப்போவதில்லை. அடுத்தவர் சஜித் பிரேமதாச அவர்கள். நிமிடத்திற்கு நிமிடம் வித்தியாசமாகப் பேசி வரும் இவரை எவ்வாறு நம்புவது என்று தென்னிலங்கை பெரும்பான்மை மக்களே கேட்பதாக அறியப்படுகின்றது.
இதற்கிடையில் தமிழர் தரப்பும் முஸ்லிம் தரப்பும் மனோ கணேசன் தரப்பும் பல இடங்களுக்கு தாவிச் செல்வதையும் அமையப்போகும் ஆட்சியில் எந்தெந்த அமைச்சர் பதவிகளைப் பெறலாம் என்பதும் அவர்களது நோக்கமாக இருக்கலாம்.
ஆனால் தமிழ் மக்களின் திட்டமிட்ட ஒரு எழுச்சியாக பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர். எனவே வடக்கு கிழக்கு மக்கள் தங்கள் வாக்குகளை நிச்சயமாக அவருக்கு அளிக்கலாம். ஏனைய வேட்பாளர்களில் தென்னிலங்கை மக்களது ஏகோபித்த வாக்குகளை ‘வெற்றி கொள்ளப்போகும்’ ஒருவராக விளங்கும் அநுரகுமார அவர்களுக்கு தங்கள் இரண்டாவது வாக்குகளை தமிழ் மக்கள் அளிக்கலாம். இதனால் தென்னிலங்கையில் அமையப்போகும் ஒரு புதிய அரசிற்கு தமிழர்கள் தங்கள் வாக்குகளை அளித்துள்ளார்கள் என்ற சிந்தனையும் தெனினிலங்கையில் தோன்றுவதற்கு ஒரு சாதகமான பங்களிப்பாக தமிழ் மக்களின் வாக்களிப்பு பயனளிக்கலாம். இதையே இவ்வார கதிரோட்டத்தின் மூலம் கனடா உதயன் எமது தாயக உறவுகளை வேண்டி எழுதப்படுகின்றது.