நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனது தம்பி விஜய் செப்டம்பர் மாதம் கட்சி பணிகளை ஆரம்பிக்கிறார். 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக அவரது கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக அந்த நேரத்தில் தான் பார்க்க வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து தம்பி விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும். அதை அப்போது பேசுவோம். எனவே அதுபற்றி இப்போது பேசி பயனில்லை. திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மீதான அவதூறு கருத்துக்கும், எனக்கும் தொடர்பு இல்லை. என்னையும், என் குடும்பத்தாரையும், எனது கட்சியில் உள்ள பெண்களையும், தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றனர். வருண்குமார், அவரது ஆதரவாளர்கள் தான் இதற்கு காரணம் என்று சொல்ல முடியுமா? இவ்வாறு அவர் கூறினார்.
