உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் இறங்கி உள்ளார். கமலாஹாரிஸ் இன்று சிகாகோவில் நடக்கும் கட்சியின் தேசிய மாநாட்டில் முறைப்படி அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளார். கமலா ஹாரிசுக்கு கட்சியில் ஆதரவு அதிகரித்து உள்ளதால் அவர் வேட்பாளராவது உறுதியாகி விட்டது. இந்த சூழ்நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட், ஏ.பி.சி. நியூஸ், இப்கோஸ் சமீபத்தில் புதிய கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு 49 சதவீத ஆதரவும், டிரம்புக்கு 45 சதவீத ஆதரவும் இருப்பது கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பென்சில்வேனியா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் அவருக்கு ஆதரவு அலை வீசுவதாக கருதப்பட்டது. ஆனால் தற்போது எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருவது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்படாத நிலையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் டிரம்ப்புக்கு 43 சதவீதம் ஆதரவும் ஜோபைடனுக்கு 42 சதவீத ஆதரவும் இருந்தது. கமலா ஹாரிசின் கை ஓங்கி இருப்பதாக புதிய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.