காலநிலை மாற்றத்திற்கூடாக உடல் உள ரீதியிலான தாக்கங்கள் எவ்விதமாக இருக்கிறது என்பதற்கான ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்று 18-08-2024 அன்று மாலை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட ஹொக்கி அணியுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்வை காவேரி கலா மன்றம் ஒழுங்குபடுத்தி நடத்தியது.
விளையாட்டு வீரர்கள் உடல் ஆரோக்கியம் தொடர்பான விடயத்தை சமூகத்தில் இருப்பவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது மிக சிறப்பான விடயம். எனினும், விளையாட்டு வீரர்கள் சூழலியல் பார்வையில் அக்கறை உள்ளவர்களாக இருப்பதன் ஊடாக எவ்விதமாக உடல் ஆரோக்கியம் மிக்க ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த செயற்பாட்டினை காவேரி கலா மன்றம் அறிமுகப்படுத்தியது.
அந்த வகையில் காவேரி கலா மன்றம், இந்த ஆகஸ்ட் மாதத்தில் காலநிலை மாற்றம் உடல் உள ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக யாழ். மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஹொக்கி அணியினரோடு இணைந்து இந்த ஹொக்கி விளையாட்டு போட்டியை வைப்பதற்கூடாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த தீர்மானித்துள்ளது.
இதனூடாக சமூகத்திலே பல்வேறு நிலைகளில் இருக்கக்கூடிய சமூகமட்ட அமைப்புகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பி, சூழலியல் சார்ந்த விடயங்களில் அதிகமான பங்களிப்புகளை நாம் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளது.
குறிப்பாக ஓர் விளையாட்டு வீரர் விளையாட்டு வீரராக மட்டும் அல்லாமல் தனது நாளாந்த செயற்பாடுகளில் எவ்விதமாக சூழலியல் மேம்பாட்டுக்கு பங்களிப்பை செய்யக்கூடும், நடந்து செல்லக்கூடிய இடங்களுக்கு நடந்து செல்கின்ற பொழுது அல்லது சைக்கிளில் செல்கின்ற பொழுது ஒரு விளையாட்டு வீரனாக சூழல் மேம்பாட்டுக்கு தனது பங்களிப்பை கொடுக்கின்றான் அவ்விதமாக தொற்றும், தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வை தனது குடும்பத்திலும் தனது விளையாட்டு கழகத்துள்ளும் தனது சமூகத்துக்குள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற மிகச்சிறந்த ஓர் சமூக விழிப்புணர்வை முன்கொண்டு செல்கின்ற ஓர் ஊடகமாக திகழும். இதை அடிப்படையாகக் கொண்டு காவேரி கலா மன்றம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக தொற்றும் நோய்களில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு நோய்கள் தற்போது எமது பிரதேசத்தில் இருக்கிறது. அந்த நோய்களில் இருந்து நாம் விடுபெறுவது சமூக மட்டத்தில் விளையாட்டு வீரர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவர்.
குறிப்பாக தொழுநோயினால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றபடியினால் அவைகளில் இருந்து நாம் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை பெறுவதற்கான ஒரு ஊக்கத்தையும் இந்த செயற்பாடுகள் கொடுக்கும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் விருந்தினர்கள், துறைசார் வைத்திய நிபுணர்கள், தொழுநோயாளர் மறு வாழ்வுக்கான சங்கத்தினர், காவேரி கலா மன்றத்தினர், யாழ்ப்பாண மாவட்ட ஹொக்கி அணியினர் என பலர் கலந்துகொண்டனர்.