குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய மகாராஜா திரைப்படம் அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பைப் பெற்று வருகிறது. விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமான இந்த படத்தில், கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியான மகாராஜா 100 கோடி வசூலைத் தாண்டியது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்சில் மகாராஜா வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மகாராஜா கவனம் ஈர்த்தது. நெட்பிளிக்ஸ் கமன்ட் செக்ஷனில் வெளிநாட்டவர்கள் மகாராஜாவை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் 2024 இல் நெட்பிளிக்ஸ்சில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் நெட்பிளிக்ஸ்சில் சுமார் 18.6 மில்லியன் பேர் மகாராஜா படத்தைப் பார்த்துள்ளனர். முன்னதாக கரீனா கபூர், கீர்த்தி சானோன்,தபு ஆகியோர் நடித்த Crew திரைப்படம் 17.9 மில்லியன் பார்வைகளுடனும், லாப்பாட்டா லேடீஸ் படம் 17.1 மில்லியன் பார்வைகளுடனும் முன்னிலையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
