பாகிஸ்தானில் இருந்து ஷியா யாத்ரீகர்கள் 51 பேரை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று ஈராக் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து மத்திய ஈரானிய மாகாணமான யாஸ்டில் நேற்று இரவு விபத்துக்குள்ளானதாக உள்ளூர் அவசர அதிகாரி முகமது அலி மாலெக்சாதே தெரிவித்தார். இந்த விபத்தில் 28 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். மேலும் 23 பேர் காயமடைந்தனர், அவர்களில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அலி தெரிவித்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறை, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 7ம் நூற்றாண்டின் ஒரு ஷியா துறவி இறந்ததைத் தொடர்ந்து 40வது நாளை குறிக்கும் அர்பாயீனை நினைவுகூருவதற்காக யாத்ரீகர்கள் ஈராக் நோக்கி சென்று கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
