இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா யோகி பாபுவின் புதிய திரைப்படத்தின் பதாகையை வெளியிட்டுள்ளார். ஆரண்ய காணடம் எனும் தனது முதல் திரைப்படத்திலேயே தேசிய விருது வென்று இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கவனம் ஈர்த்தார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து அவர் இயக்கிய சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தா, ரம்யா கிருஷ்ணன், ஃபகத் ஃபாசில், மிஷ்கின் நடித்திருந்தார்கள். நடிகர் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இதனிடையே நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனகாவும் நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு. இவர் நடிகை லட்சுமி மேனன் உடன் இணைந்து மலை என்ற படத்தில் நடிப்பதாக 2022இல் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குநர் சுசீந்திரன், சீனுராமசாமி இடம் உதவி இயக்குநராக இருந்தவ ஐபி முருகேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கொங்கனி மலையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் லஷ்மி மேனன் மருத்துவராக நடித்துள்ளார். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடேட் இதனை தயாரிக்கிறது. இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்தப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகுமெனவும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் காளி வெங்கட், சிங்கம் புலி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காளி வெங்கட் வில்லனாக நடித்துள்ளார். வில்லனாக இது அவருக்கு முதல்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பும் செய்துள்ளார்கள். இந்நிலையில் இதன் புதிய பதாகையை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா வெளியிட்டுள்ளார்.
