உக்ரைன் நாட்டுக்கு எதிராக 2022-ம் ஆண்டு ரஷியா போர் தொடுத்தது. தொடக்கத்தில் பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் படைகள் போரிட்டு மீட்டன. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றை செய்து வருகின்றன. 2 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த போரில் இருதரப்பிலும் வீரர்கள், பொதுமக்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில், ரஷியாவின் குர்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள பாலம் ஒன்றை உக்ரைன் தகர்த்தது. ரஷியாவின் வான்னோயி நகரருகே அமைந்த இந்த பாலம் தகர்க்கப்படும் வான்வழி வீடியோ ஒன்றை வெளியிட்ட உக்ரைனின் விமான படை தளபதி மைகோலா ஒலெஸ்சக், மற்றொரு பாலம் தகர்க்கப்பட்டது என தெரிவித்து உள்ளார்.
ரஷிய பகுதிகளில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் நோக்கில், கடந்த 6-ந்தேதி அதன் எல்லை பகுதிகளில் படைகள் மற்றும் கவச வாகனங்களை உக்ரைன் அனுப்பி உள்ளது. இது ரஷியாவின் 2-வது முக்கிய பாலம் ஆகும். இதற்கு முன், கிளஷ்கோவோ பகுதியில் பாலம் ஒன்றை தகர்த்து விட்டோம் என கடந்த வெள்ளி கிழமை உக்ரைன் அறிவித்து இருந்தது. இந்த சூழலில் மற்றொரு பால தகர்ப்பு பற்றியும் அறிவித்தது. இந்நிலையில், மற்றொரு அதிரடி தாக்குதலில் உக்ரைன் ஈடுபட்டது. ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைனில் இருந்து 11 ஆளில்லா விமானங்கள் அனுப்பப்பட்டன. ரஷியா மீது நடத்தப்பட்ட பெரிய தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படும் சூழலில், அவை எல்லாவற்றையும் ரஷியா தடுத்து அழித்துள்ளது. இதுபற்றி மாஸ்கோ நகர மேயர் செர்ஜி சோபியானின் கூறும்போது, மொத்தம் 45 ஆளில்லா விமானங்கள் இதுவரை தாக்கி அழிக்கப்பட்டு உள்ளன என கூறினார். இதில் யாருக்கும் பாதிப்போ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.