ஒன்றாரியோ மாகாண அமைச்சர் விஜய் தணிகாலம் தெரிவித்துள்ள கருத்துக்கள்
ஆகஸ்ட் 14, 2024 அன்று, கனடாவின் பிரம்டன் நகரிலுள்ள சிங்கூசிப் பூங்காவில் தமிழின அழிப்பு நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இது கனடாவில் மட்டுமன்றி உலகெங்குமுள்ள ஈழத் தமிழர்களுக்கான ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்வு தமிழின அழிப்பு நடைபெற்றது என்பதற்கான சர்வதேச அங்கீகாரம், அதற்கான பொறுப்புக்கூறல் மற்றும் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் போன்றவற்றின் ஒரு படிநிலையாக அமைகிறது. தமிழர்கள் மீதான இன அழிப்பை மறுதலிப்பவர்கள் இந்நிகழ்வைச் சீர்குலைக்க முனைந்த போதிலும், பிராம்ப்டன் நகரமுதல்வர் பட்றிக் பிரவுன், பிரம்ரன் தமிழ் ஒன்றியம், கனடிய தமிழர் தேசிய அவை (NCCT) மற்றும் பல தமிழ் அமைப்புகளின் பேராதரவுடன் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேறியது.
அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் இந்நிகழ்வு குறித்துக் குறிப்பிடுகையில், “இந்நினைவுச்சின்னம் எ மது மக்களின் வரலாற்றையும் நடந்தேறிய தமிழின அழிப்பை எதிர்கால சந்ததியினரால் நினைவுகூரப்படுவதை உறுதிசெய்யும் ஒரு சக்திவாய்ந்த அடையாளமாகத் திகழும். இலங்கையில் நடந்த இன அழிப்பின்போது இறந்தவர்களை நினைவுகூருவதற்கான எம் உரிமையை கனடாவில் ஒருபோதும் தடுத்துவிட முடியாது” என்றார். அவரின் இக்கூற்று, எந்த சக்தியாலும் உண்மையின் குரலை நசுக்கவோ, நீதிக்கு வேண்டி நிற்கும் மக்களின் ஒருமித்த உணர்வை அழிக்கவோ முடியாதென்ற மக்களின் உள்ளக்கிடக்கையை எதிரொலித்தது.