போலந்தில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக 10 மணி நேரம் பயணம் செய்து உக்ரைன் தலைநகர் கீவ் நகரை பிரதமர் மோடி சென்றடைந்தார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த புதன்கிழமை போலந்து நாட்டிற்கு அரசமுறை பயணம் செய்தார். 1979 இல் மொரார்ஜி தேசாய் அங்கு பயணம் மேற்கொண்ட நிலையில் 45 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து நாட்டிற்குப் பயணம் செய்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார். மோடி தனது பயணத்தின் போது இருதரப்பு கூட்டாண்மையை மேம்படுத்துவதற்காக பிரதமர் டொனால்ட் டஸ்க் மற்றும் அதிபர் ஆண்ட்ரேஜ் துடா ஆகியோரை சந்தித்தார். போலந்தில் உள்ள இந்திய வம்சவளியினருடன் உரையாடினார். போலந்து பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி ரயில் மூலம் இன்று உக்ரைன் சென்றுள்ளார். மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்த 6 வாரங்களுக்குப் பிறகு, சிறப்பு ரயில் மூலமாக போலந்தில் இருந்து 10 மணி நேரம் பயணம் செய்து கீவ் நகரை பிரதமர் மோடி சென்றடைந்தார். அவருக்கு உக்ரைன் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது அவரது முதல் உக்ரைன் பயணமாகும். இந்த பயணத்தின் போது, இரு நாட்டு தலைவர்களும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வணிகத் துறைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.