மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த ‘திரிஷ்யம்’ மலையாள படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் மறுபதிப்பு செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வெளிவந்து வரவேற்பை பெற்றது.
‘திரிஷ்யம்’ படத்தின் 3-ம் பாகம் வருமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், இயக்குநர் ஜீத்து ஜோசப் ‘திரிஷ்யம் 3’ குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘திரிஷ்யம் 3 படத்தின் உச்சக்கட்ட காட்சிகளை உருவாக்கி விட்டேன். அது மோகன்லாலுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இடைப்பட்ட கதையை மட்டும் உருவாக்க வேண்டும். முதல் பாகம் வெளியாகி 5 ஆண்டுகளுக்கு பிறகே 2ம் பாகத்தை உருவாக்கினோம். அதேபோல, 3ம் பாகம் உருவாகவும் கொஞ்சம் காலமாகும்,’ என்றார்.