போலந்தில் இருந்து ரெயில் மூலம் உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, தலைநகர் கீவில் அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி கூறியதாவது: இந்த போரில் நாங்கள் (இந்தியா) நடுநிலை வகிக்கவில்லை. தொடக்கத்தில் இருந்தே ஒருபக்க சார்பாகவேதான் இருக்கிறோம். அது அமைதியின் பக்கம். நாங்கள் புத்தரின் நிலத்தில் இருந்து வந்திருக்கிறோம். அங்கே போருக்கு இடமில்லை. மகாத்மா காந்தியின் தேசத்தில் இருந்து வந்திருக்கிறோம், அவர் ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரு அமைதியின் செய்தியை வழங்கியவர். பேச்சுவார்த்தைகள், தூதரக நடவடிக்கைகள் மூலம்தான் இந்த தீர்வு கிடைக்கும். எனவே நேரத்தை வீணடிக்காமல் அதை நோக்கி நாம் நகர வேண்டும். எனவே இரு தரப்பும் ஒன்றாக அமர்ந்து பேசி, இந்த நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கான வழிகளை காண வேண்டும். உக்ரைன் அமைதி திரும்புவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.