மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வாழை படத்தை இயக்குநர் பாரதிராஜா பாராட்டி பேசியுள்ளார். அந்த காணொளியில் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில் பேசிய பாரதிராஜா, “சினிமா துறைக்கு வந்ததே புண்ணியம் என சில படங்களை பாரத்து யோசித்தது உண்டு. ‘வாழை’ அப்படியொரு படம்.
படத்தைப் பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தம் இல்லாத தெருக்கள் என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார், மாரி, நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம். சத்யஜித் ரே, ஷியாம் பெனெகல் படங்களை பார்க்கையில் பொறாமையாக இருக்கும். அப்படியான படங்களை எடுக்க தமிழனுக்கு தகுதி இல்லையோ என ஆதங்கப்படுவேன். ஆனால், இவர்களை எல்லாம் விஞ்சுகிற வகையில் என் நண்பன், என் மாரி செல்வராஜ் அற்புதமாக ஒரு படம் பண்ணியிருக்கான். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கான் என மார்தட்டி சொல்லுவேன்” என்று தெரிவித்துள்ளார்.