மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘படை தலைவன்’ திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சகாப்தம், மதுரை வீரன் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் மூன்றாவதாக வெளியாக இருக்கும் திரைப்படம் ‘படை தலைவன்’. அன்பு இந்த திரைப்படத்தை இயக்கும் நிலையில், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இந்த திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக சென்ற ஆண்டு இறுதியில் நடிகர் விஜயகாந்தின் திடீர் மறைவை அடுத்து அவரது குடும்பத்தார் உடைந்து போன நிலையில், அவரது மகன் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படப்பிடிப்பிலும் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து சில வாரங்களாக ‘படை தலைவன்’ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த திரைப்படம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் இந்த திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ‘படை தலைவன்’ திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
