தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தற்போது ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் ‘பிரதர்’ படத்தில் நடித்துள்ளார். இந்தபடத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகி உள்ளது. இந்த படமானது அக்கா – தம்பி உறவை அடிப்படையாக கொண்டு படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து படமானது வெளியீடுக்கு தயாராகி வருகிறது. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தில் உள்ள பாடல்கள் மீது பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விவேகானந்த் சந்தோஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதற்கிடையில், இப்படத்தின் ‘மக்காமிஷி’ பாடல் கடந்த மாதம் 20-ந் தேதி வெளியானது. ரசிகர் மத்தியில் மிகவும் வைரலான இப்பாடல் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இது குறித்த பதிவினை படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
