இந்தியா, நேபாளம். வியட்நாமில் இருந்து ஏராளமான புலம்பெயர்ந்தோர் பிரேசில் நாட்டுக்கு சென்றனர். சுமார் 660 பேர் அங்குள்ள சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றடைந்தனர். அவர்கள் தங்களை பிரேசிலுக்குள் அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் விசா இல்லாததால் விமான நிலையத்தில் ஒரு வாரமாக தவித்து வருகிறார்கள். அவர்கள் தரையில் படுத்து தூங்குகிறார்கள். உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவர்கள் பரிதவிக்கிறார்கள். இதில் சிலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடாவுக்கு செல்வதற்காக பிரேசில் வழியை வெளிநாட்டினர் பயன்படுத்துவதை தடுக்க விதிகளை அந்நாட்டு அரசாங்கம் கடுமையாக்கி புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. பிரேசில் விசா இல்லாத வெளிநாட்டுப் பயணிகள் வேறொரு நாட்டிற்குச் செல்ல வேண்டும் அல்லது தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று பிரேசிலின் பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனால் 660 அகதிகள் பிரேசிலுக்குள் நுழைய முடியாமல் தவித்து வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பிரேசிலில் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை ஏற்றம் கண்டுள்ளது, குறிப்பாக ஆசியாவில் இருந்து, வட அமெரிக்காவிற்குச் செல்லும் வழியில் ஒரு இடமாற்றத்திற்காக இங்கு வருகிறார்கள்.
பிரேசிலுக்குள் நுழைய, அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக அகதி அந்தஸ்தைக் கேட்கிறார்கள். ஆனால் அதன்பின் பெரும்பான்மையானவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்கிறார்கள். தற்போது விசா இல்லாமல் சாவ் பாலோவுக்கு வரும் பயணிகள் பிரேசிலில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றனர்.