ஜாம்பியா நாட்டின் லுசாகா மாகாணத்தில் சாங்வே மாவட்டத்தில் கட்டிட பணிகளுக்கு தேவையான கற்களை எடுக்கும் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சுரங்கத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் நேற்று பணியை முடித்தபோது, திடீரென சுரங்கம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில், தொழிலாளர்கள் சுரங்க இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதுபற்றி காவல் துறையின் செய்தி தொடர்பாளர் ரே ஹமூங்கா கூறும்போது, சுரங்கம் இடிந்து விழுந்தது பற்றிய தகவல் அறிந்து காவல்துறை சம்பவ பகுதிக்கு சென்றனர். இதில், ஓட்டுநர் ஒருவர் மீட்கப்பட்டார். பகுதியளவு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அவர், நிறைய பேர் உள்ளே சிக்கியுள்ளனர் என கூறியுள்ளார். அவர்களை மீட்கும்படியும் காவல்துறையிடம் தெரிவித்து உள்ளார். இந்நிலையில், மீட்பு குழுவினர் 8 பேரின் உடல்களை மீட்டனர். மற்றவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது என கூறியுள்ளார்.