அரசியலில் விஜய் வெற்றிப் பெற வாழ்த்துகள் என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; விஜய் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து, ஆட்சியை கைப்பற்றி விட முடியும் என்கிற ஒரு எண்ணம் நீண்ட காலமாக தமிழக அரசியலில் இருந்து வருகிற ஒன்றுதான். அந்த முயற்சியில் ஆந்திராவிலும் கூட என்டிஆர்-ஐ பின்பற்றி பலர் வந்து பார்த்தார்கள். எம்ஜிஆர் சினிமாவில் இருந்த காலத்திலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால் அவர் அரசியலில் இருந்து அதாவது ஒரு ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரால் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட போது, நீண்ட நெடிய அனுபவம் உள்ள பல தலைவர்கள் அவரோடு வெளியேறினார்கள். அவருடைய வெற்றிக்கு அது ஒரு காரணம். வெறும் சினிமா ரசிகர்களை, ரசிகர் மன்ற தலைவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு அரசியல் செய்யவில்லை. அவர் கட்சியை தொடங்குகிற போது திமுகவிலிருந்து அவரோடு சேர்ந்து விலகிய பல அரசியல் தலைவர்கள் அவரோடு இருந்தார்கள். அதனால் வெற்றி பெற முடிந்தது.
அதன் பிறகு வந்த தலைவர்கள், அதாவது சினிமா மூலம் வந்த தலைவர்கள் அரசியலில் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு அது ஒரு காரணம். தற்போது மக்களிடையே சமூக ஊடகங்களின் வாயிலாக வளர்ந்துள்ள அரசியல் விழிப்புணர்வு இன்னொரு காரணம். விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள். அரசியல் எவ்வளவு கடினமானது, போராட்டங்கள் நிறைந்த ஒரு களம் என்பதை இனி நடைமுறையில் அவர் சந்திக்க நிறைய வாய்ப்புகள் உருவாகும். தாக்குப் பிடித்து நிற்க வேண்டும். மக்களுடைய நன்மதிப்பை பெற வேண்டும். இது எல்லாம் நிகழ்ந்த பிறகு தான் இதுகுறித்து நாம் ஒரு கருத்தை சொல்லமுடியும். முன்கூட்டியே நாம் ஒரு யூகத்தில் கணக்கு போட்டு சொல்ல முடியாது. அரசியலில் விஜய் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துகள் என்றார்.