ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் பொது வேட்பாளரின் ஆதரவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட எமது கட்சி பொதுவேட்பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் ஜனாதிபதி வேட்பாளராக அரியநேந்திரன் போட்டியிடுகின்ற நிலையில் நமது ஆதரவினை வழங்கியிருந்தோம்.
இந்நிலையில் தெற்கிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றார் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோரிடம் இருந்து பேச்சுக்கு வருமாறு அழைப்பு கிடைத்தது சென்றோம்.
அதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தி இருந்தோம் அதாவது எமது பொது வேட்பாளரின் கொள்கை தொடர்பில் அழைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தெளிவாக கூறினோம் அவர்களும் அதனை ஏற்றார்கள்.
ஆனால் அவர்கள் தமக்கு ஆதரவு வழங்குமாறு கேட்கவில்லை அது உங்கள் ஜனநாயக உரிமை உங்களுடைய கோரிக்கை தொடர்பில் தாம் கரிசனை செலுத்துவதாக தெரிவித்தார்கள்.
நாங்கள் அவர்களின் கருத்து தேர்தலுக்கான கருத்தா? அல்லது உண்மையில் தமிழ் மக்கள் தொடர்பில் கரிசனையாக உள்ளனரா என்பது தொடர்பில் எமது பொது கட்டமைப்புடன் ஆராய்ந்து பதில் தருவோம் என கூறினோம்.
இந்தச் சந்திப்பின் பின்னர் ரெலோ ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக சில விசமிகள் பொய்ப் பிரச்சாரம் செய்தனர்.
அதுமட்டுமல்லாது அண்மையில் இலங்கைக்கான சுவிஸ் தூதர் பொதுக் கட்டமைப்பு சார்ந்தவர்களை யாழ்ப்பாணத்தை சந்தித்தார்.
குறித்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரான சித்தார்த்தன் பங்கு பற்றிய நிலையில் நாங்கள் பங்கு பெற்ற வில்லை என்பதைக் காரணமாக வைத்து சிலர் விஷமப் பிரச்சாரம் செய்தனர்.
சுவிஸ் தூதர் யாழ்ப்பாணம் வந்ததன் நோக்கம் சிவில் அமைப்பு பிரதிநிதிகளை சந்திப்பதற்காக வருகை தந்தார் திடீரென்று ஒழுங்குபடுத்தப்பட்ட சந்திப்பு என்பதால் எமது கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அது பங்கு பெற்ற முடியவில்லை.
தற்போதும் இரண்டாவது கட்டமாக பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றனர் அவர்களுடனும் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.
ஆகவே எமது கட்சி தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொது வேட்பாளரின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாட உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.