கனவு மெய்ப்படவேண்டும். அற்புதமான ஒரு கலை அரங்கு. போர்க்கால அனர்த்தங்களின் பின்னராக பரிணமிக்கும் கலைகளில் முகிழ்க்கும் இளைய தலைமுறை. தம் அடையாளப் பேணலில் தமது பாரம்பரிய இசை – நடன ஆளுமையில் சிறக்கும் புலம்பெயர்ந்த புதிய தலைமுறை.
இம் முப்பரிமாண இணைப்பில் தோற்றிய ஒரு கனவு, ‘கலா ரசனா’.
நம்முடைய கலைப் பொக்கிஷங்களாக நாம் பேணும் இசை, நடனம் இப்போது இந்தியா, இலங்கைக்கு வெளியே, புலம்பெயர் நாடுகளிலும் வளர் கலைகளாகின்றன. ஐரோப்பிய நாடுகளிலே, ஸ்கன்டினேவிய நாடுகளிலே, கனடாவிலே, அவுஸ்திரேலியாவிலே கர்நாடக இசையிலும் பதரநாட்டியத்திலும் திறன்மிக்க கலைஞர்கள் பலர், இக் கலைகளில் மெச்சத்தக்க ஆற்றலுடன் அரங்கேற்றங்கள் வாயிலும், வேறு மேடை நிகழ்வுகளிலும் பலரை வெளிப்படுத்துவதை பரவலாக காண்கிறோம்.
அந்நியப்பட்ட வாழ்விலும் ஒரு பிணைப்பாக இழையோடும் இக் கலைகளில் இப் புதிய தலைமுறையினரிடையேயும் ஓர் அந்நியோன்ய இணைப்பை அவாவி, இக் கலைகள் வழி அவர்களை சங்கமிக்கவைத்து, அச் சங்கமத்தில் திளைக்கும் ‘சங்கமம்’ என்ற நிகழ்வு, ‘கலா ரசனா’வின் கனவாகியது; அது நனவில், அழகுடன் அரும்பியிருக்கிறது.
கடந்த 19ஆம் திகதி கலாரசனாவின் முதலாவது சங்கமம் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஒரு முத்திரையைப் பதித்திருக்கிறது. யாழ்ப்பாணத்துக்கு இந்திய அரசு வழங்கிய கலாசார மண்டபத்தின் நவீனத்துவ வசதிகளும், அது நிறைக்கும் ரம்மியமும் இத் தலைமுறைகளின் சங்கம கனவை இக் கலாசார மண்டபத்துடனும் இணைத்தது.
இசையும் நடனமுமாக வருடத்தில் இரு தடவைகள் நல்லூர் உற்சவ காலத்தில் இரு தினங்களும், மார்கழியில் சென்னை இசைவிழாக் காலத்தில் இருதினங்களுமாக திட்டமிடப்பட்டுள்ள சங்கமம் முதல் நிகழ்வு, இலங்கைக் கலைஞர்களுடன் ஒருநாள் நிகழ்வாக நடைபெற்றது.
‘ராகசுதா’ என்ற வயலின் இசையும், ‘நூபுர லாவண்யம்’ என்ற நடன நிகழ்ச்சியும் இதில் இடம்பெற்றன. வயலின் வாத்தியத்தில் ஒலியின் தரத்துக்காக அதன் அமைப்பில் சிறு மாற்றங்களைச் சிலர் செய்வதுண்டு. ஆனால், இவ்வொலித் தரத்துக்காக இரட்டை வயலினும் கண்டுபிடிப்பாகியது. வயலின் வித்வான் எல். சுப்பிரமணியத்தின் சகோதரரான எல். சங்கர் இதனை அறிமுகம்செய்தார்.
‘ராகசுதா’வில், தானே தன்கைபட உருவாக்கிய இரட்டை வயலினுடன் பத்மநாதன் ஷியாம்கிருஷ்ணா இந்த வயலின் நிகழ்ச்சியை அளித்தார். அந்த வயலினுடன் இதுதான் முதல் கச்சேரி என்று சொன்னார்.
பெஹாக் வர்ணத்துடன் ஆரம்பித்து, சாருகேசியில் ராகம்-தானம்-பல்லவி. நல்லூர் முருகன் பேரில் அவரே தயாரித்திருந்தார். முன்னதாக, சாவித்திரி ராகத்தில் ஒரு கீர்த்தனை. பொதுவில் அரிதானதான இந்த ராகத்தில், எல். சங்கர் வாசித்திருந்த “ஆனந்த நடமாடும் தில்லை…’’ கீர்த்தனை. பின்னர், ஜனரஞ்சகமாக “சின்னஞ்சிறு கிளியே…’’ முத்தாய்ப்பாக, தனசிறி தில்லானா.
மண்டபம் நிறைந்திருந்த அவை, லயிப்பில் ஆழ்ந்திருந்தது. சுகமும் விறுவிறுப்பும் எம். எஸ். கோபாலகிருஷ்ணன், எல். சுப்பிரமணியம் ஆகியோரை நினைவில் கொணர்ந்தன.
தந்தையார் பத்மநாதன் ஒரு வயலின் வித்வான். பாட்டு, மிருதங்கம் ஆகியவற்றிலும் தேர்ந்தவரான ஷியாம்கிருஷ்ணா வளமாகும் ஒரு கலைஞர்.
‘நூபுர லாவண்யம்’ என்றால், சலங்கையின் அழகு என்று பொருள் கொள்ளலாம். நடனத்தின் அம்சங்கள் என்ன? நூபுர லாவண்யத்தில், அவை அத்தனையும் அழகு – கொள்ளை அழகு; முழுமையான – திட்டமான அழகு – நேர்த்தி.
சிறுமிகளும் யுவதிகளுமாக இருபத்துநான்கு பேர் மாறிமாறி, ஒருசொட்டு தாமதமற்ற, வேகமான அசைவுகளும், நளினமுமான நடன அமைப்புடன் வெளிப்படுத்திய சித்தரிப்பு யுக்திகள் பிரமிப்பூட்டின.
திருப்புகழுடனான நாட்டை அலாரிப்பு, அபிநயமும்சேர, தோற்றுவித்த கம்பீரம், நிகழ்ச்சி முழுமையும் நிலைகொண்டது.
அபிநயத்துக்கு முத்திரையாகும் “பாரோ கிருஷ்ணையா…’’ யமன் கல்யாணி பதம். ஓர் ஆணும் பெண்ணும் சிவன், சக்தியாக அளித்த “சம்போ சங்கர சிவா…’’
பின்னர், ‘நான் இராவணன் பேசுகிறேன்’ நாட்டிய நாடகம். கதை அமைப்பிலும் நாட்டிய அமைப்பிலும் புதுமைகளை சரளமாய் நிறைத்தது. சீதையைக் கவர்ந்துசென்ற, ‘நல்லவன்’ இராவணனை செப்புகிறது.
நிகழ்ச்சி முழுமையும் இடையிடையே மிளிர்ந்த நாட்டிய நிலைகள், ஆசிரியையின் படைப்பாற்றலை சாற்றியது.
‘நர்த்தன ஷேத்திரா’ நடன பள்ளியின் இயக்குநர் திருமதி பிரியதர்சினி வாகீசனின் மாணவர்கள் இவர்கள். இவருடைய சிரேஷ்ட மாணவி செல்வி ஆதித்தியா ஜெயபாலன் துணையாகவிருந்தார்.
ஒளி அமைப்பு பிரமாதம். நிகழ்ச்சிக்கு மேலும் ஒரு ரசனை சேர்த்தது.
ஆக, யாழ் கலாசார மண்டபத்தில் லண்டன் ‘கலா ரசனா’வின் இந்த வேனில் கால ‘சங்கமம்’ நிகழ்ச்சி, ஆவலை நிறைக்கும் கட்டியமாகியிருக்கிறது. மார்கழி ‘சங்கமம்’, புலம்பெயர்ந்த நாட்டு வித்துவ செழுமையுமாய் கலாரசனை சேர்க்கும்.
மார்கழியில், யாழ்ப்பாணத்தில் இந் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியளிக்கலாம் என கருதும் புலம்பெயர் நாடுகளின் வித்துவ ஆற்றலுடனான இளம் தலைமுறையினர் தொடர்புகொள்ளலாம்.
kalarasanalondon@gmail.com கர்நாடக சங்கீதத்தில் வாய்ப்பாட்டு, வாத்திய இசையோ அல்லது பரதநாட்டியமோ தொடர்புகொள்ளுங்கள்:
Arjune- Local Journalism Initiative Reporter-2