– கருணாகரன்
ஈழவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களில் ஒன்று கூட இப்போது மிஞ்சவில்லை. ஈழவிடுதலைக்கு முன்னே எல்லாமே அழிந்தும் அழிக்கப்பட்டும் விட்டன. அவற்றின் தலைவர்களும் இன்றில்லை. மிஞ்சியிருந்த தலைவர்களில் ஒருவரான தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் கடந்த ஜூலை 19, 2024 அன்று விடைபெற்றிருக்கிறார்.
ஈழப் போராட்டம் உருவாக்கிய விதிமுறைக்கு மாறாக, வர லாற்று ஆச்சரியமாகத் தம்பாப்பிள்ளை மகேஸ்வரின் மரணம் இயற்கையாக நிகழ்ந்துள்ளது. அதுவும் 2024-ல், யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, கூடிய வயதில் (69) மரணத்தைத் தழு விக் கொண்ட விடுதலைப் போராட்டத் தலைவராகவும் மகேஸ்வரனே உள்ளார்.
மகேஸ்வரனின் மரணம் ‘யாழ்ப்பாணத்தில் நடந்தது’ என்று ஏன் அழுத்தம் கொடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது என் றால், அவருடைய விடுதலைப் போராட்ட வாழ்க்கைப் பய ணம், ஈழப் போராட்டத்தின் முடிவு ஆகியவற்றை இணைத்துப் பார்க்கின்றவர்களுக்கு மகேஸ்வரன், பின்னாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்ததே ஆச்சரியம். உண்மையில் மிக நெருங் கிய, மிகச் சிறிய நட்பு வட்டத்துக்கு அப்பால் மகேஸ்வரன் இலங்கையில் – யாழ்ப்பாணத்தில் இருந்ததே தெரியாது. ஏறக்குறைய அதுவும் ஒரு தலைமறைவு போன்றதுதான். முன் பொரு காலம் படைத் தரப்பின் கெடுபிடிகளுக்காகத் தலைம றைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார் மகேஸ்வரன். இந் தத் தலைமறைவு அப்படியானதில்லை. இது அவர் தானா கவே ஏற்படுத்திக் கொண்ட ஒதுங்கியிருத்தலின் விளைவான தலைமறைவாகும்.
1980-களில் இலங்கை அரசுக்குப் பேரதிர்ச்சியை அளித்தவர் மகேஸ்வரன். அவர் உருவாக்கிய தமிழீழ இராணுவம் (Tamil Eelam Army) என்ற இயக்கம் அன்றைய ஈழ விடுதலை இயக்க வரிசையில் ஆறாவது அல்லது ஏழாவதாக வரக்கூ டும். அன்றிருந்த PLOT, EPRLF, NLFT, EROS போன்ற இயக்கங்கள் அதிகமும் அரசியற் தத்துவார்த்தக் கோட்பாட்டை முன்னிறுத்தியே ஈழவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத் தன. இதனால் அவை மக்களிடத்திலும் தமது உறுப்பினர்களுக்குள்ளும் சித்தாந்த உரையாடல்களில் கூடுதலாக ஈடுபட் டன. விடுதலைப் புலிகள் (LTTE), தமிழீழ விடுதலை இயக் கம் (TELO), தமிழீழ விடுதலை இராணுவம் (TELA), தமிழீழ இராணுவம் (TEA) போன்றவை இலங்கை அரசு, அதன் படைக் கட்டமைப்பு மீதான இராணுவ நடவடிக்கையை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டன. இதனால் இவற்றுக்கு ஒரு தனிக் கவர்ச்சியும் கவனமும் ஏற்பட்டிருந்தது.
அரசியற் கொள்கை சார்ந்த சிந்தனையை வளர்த்துக் கொள் ளல், சித்தாந்த உரையாடல்களை நடத்துதல்களையும் விட அதிரடி நடவடிக்கை(Actions)களில்த்தான் மகேஸ்வரனின் ஈடுபாடிருந்தது. அதுதான் அன்றைய அரச பயங்கரவாதத்துக்கு – தமிழர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளுக்கு தக்க பதிலாக இருக்குமென மகேஸ்வரன் கரு தினார். அதற்கேற்ற வகையில் தமிழீழ இராணுவத்தின் (TEA) நடவடிக்கைகள் திட்டமிட்டு, மேற்கொள்ளப்பட்டன. அதனால் மகேஸ்வரன் ஒரு Action Hero-வாகத் தோற்றம் கொண்டார் அல்லது அப்படிக் கருதப்பட்டார். அவருடைய அமைப்பின் பெயரே (Tamil Eelam Army) அதைச் சொல் லும். தொகுத்துச் சொன்னால் மகேஸ்வரனின் அமைப்பின் பெயர், எண்ணம், நோக்கம் போன்றவற்றுக்கு ஏற்றமாதிரித் தான் TEA-இன் நடவடிக்கைகள் அமைந்தன.
மகேஸ்வரன் 1945-ல், யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் பிறந்த வர். தந்தையார் தம்பாப்பிள்ளை கொழும்பு – மருதானை தவ ளகிரி ஹோட்டலின் உரிமையாளர். மகேஸ்வரன், யாழ்ப்பா ணம் மத்திய கல்லூரியில் படித்தார். அங்கே அவருடைய சம கால மாணவர்கள் டக்ளஸ் தேவானந்தா, ராகவன் போன்றோர்.
உயர் கல்விக்காக லண்டனுக்குச் சென்ற மகேஸ்வரனுக்கு லண்டனில் செயற்பட்டுக் கொண்டிருந்த ஈழவிடுதலைச் செயற்பாட்டாளர்களுடன் அறிமுகம் ஏற்பட்டாலும், அவர்களு டன் சேர்ந்தியங்குவதைவிட இலங்கைக்குத் திரும்புவதே சரி யெனத் தோன்றியது. அதன்படி நாடு திரும்பினார். திரும்பிய வர், இயக்க நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட புல் மோட்டை வங்கிக் கொள்ளை தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, இராணுவ முகாமான பனாகொடையில் தடுத்து வைக்கப்பட்டார். ஆனாலும், அங்கிருந்த ஜன்னல் கம்பியை மிகச் சாதுரியமாக உடைத்துத் தப்பிச் சென்றார் மகேஸ்வரன். இந்த Escaping அன்றைய நாளில் ஒரு பெரிய சாகஸமாகப் போராளிகளிடத்திலும் மக்களிடத்திலும் மகேஸ்வரனை ‘பனா கொட மகேஸ்வரன்’ என ஆக்கியது. அதற்கு முன்பு, ‘தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்’ அல்லது சுருக்கமாகத் ‘தம்பா’ என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம், ஏற்கனவே இன் னொரு மகேஸ்வரன் (உமாமகேஸ்வரன் – PLOT) போராட்டத்திலிருந்ததாகும்.
பனாகொடயிலிருந்து தப்பியவரை இலங்கை அரசாங்கம் மீண்டும் கைதுசெய்து வெலிக்கடைச் சிறையில் அடைத்தது. 1983 யூலை 25, 27-ஆம் திகதிகளில் தமிழ் அரசியல் கைதி கள் மீது வெலிக்கடை சிறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குட்டி மணி, ஜெகன், தங்கத்துரை, இராசகிளி உள் ளிட்ட 53 பேர் சிங்களச் சிறைக் கைதிகளாலும் சிறை அதிகாரிகளாலும் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட காடையர்களாலும் கொலை செய்யப்பட்டனர். இவர்களை எதிர்த்துப் போராடித் தப்பினார்கள், ஒரே செல்லில் அடைக்கப்பட்டிருந்த தம்பாவும் டக்ளஸ் தேவானந்தாவும்.
இதற்குப் பின்னர் தமிழ் அரசியற் கைதிகள் மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கிருந்து 1983 செப்டம் பர் 23-ல் ஏனைய 41 கைதிகளோடு தப்பிச் சென்றார் மகேஸ்வரன். இதற்குக் கடமையிலிருந்த சிறைக்காவலரின் ஒத்துழைப்புக் கிடைத்திருந்தது. மட்டக்களப்புச் சிறையிலிருந்து தப்பியோரில் அன்றைய ஈ.பி.ஆர்.எல்.எப். தளபதி டக்ளஸ் தேவானந்தா, விரிவுரையாளர் மு. நித்தியானந்தன், காந்தியம் டேவிட் ஐயா, டொக்ரர், ஜெயகுலராசா, முன்னாள் வட கிழக்கு முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், இராஜசுந்தரம், பரமதேவா உள்ளிட்ட பலர் முக்கியமானவர்கள்.
இதற்குப் பிறகு TEA-இன் இரண்டாம் கட்டச் செயற்பாடுகள் விரிவடைந்தன. அதிரடியாகக் காத்தான்குடி வங்கிக் கொள்ளை. ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள நகையும் பண மும் கொள்ளையிடப்பட்டது அன்று இன்னொரு பெரிய ஆச்சரியமான முயற்சியாகக் கருதப்பட்டது.
அதற்குப் பிறகு கிளிநொச்சிப் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலை TEA நடத்தியது. இந்தத் தாக்குதல் TEA-ஐக் குறித்து இலங்கை அரசு படைத்துறை மட்டுமல்ல, ஏனைய ஈழ விடுதலை இயக்கங்களையும் யோசிக்க வைத்தது. தம்பா ஒரு முக்கியமான இராணுவ நடவடிக்கைக்குரிய ஆளுமையா கப் பார்க்கப்பட்டார். அதற்கு முன் புலிகளையும் ரெலோவையும்தான் பலரும் இராணுவ நடவடிக்கையில் முதன்மைத் தரப்பினராகக் கருதியிருந்தனர்.
கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத் தாக்குதலில் வெடிபொ ருள் நிரப்பிய வாகனத்தைச் செலுத்தி வந்து வெடிக்க வைக் கும் புதிய உத்தியைத் தம்பா பயன்படுத்தியிருந்தார். குறைந்த போராளிகளைக் கொண்ட TEA-யைக் கொண்டு கூடிய தாக் கத்தை உண்டாக்கக் கூடிய தாக்குதல்களைச் செய்வதே தம் பாவின் நோக்காக இருந்தது. இதை அவருடன் பின்னாளில் உரையாடியபோது சொன்னார்.
இதற்கு அடுத்ததாக தம்பா மேற்கொண்ட இன்னொரு நடவடிக்கை, மீனம்பாக்கம் விமான நிலையக் குண்டுவெடிப்பா கும். உண்மையில் இந்தக் குண்டுவெடிப்பு நிகழத் திட்டமிடப்பட்டது கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திலாகும். அப்படி நிகழ்ந்திருந்தால் தம்பாவின் இடமும் TEA-ன் இட மும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் வேறு விதமாக – இன் னொரு பரிமாணமாக அமைந்திருக்கக் கூடும். துரதிஸ்டவசமாகப் பாதுகாப்பு மற்றும் விமான நிலைய நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அந்த நேரக்கணிப்புக் குண்டுப் பொதி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சிக்கவேண்டி வந்தது. அதனால் அந்தக் குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்ட னர். 27 பேர் காயப்பட்டனர்.
இது தம்பாவின் போராட்ட வாழ்க்கையையும் TEA-ன் தொட ரும் போராட்டத்தையும் நெருக்கடிக்குள்ளாக்கியது. தம்பா கைது செய்யப்பட்டு சென்னை – புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஈழத்தில் ஏனைய இயக்கங்களைக் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்து தடை செய்திருந்த விடுதலைப்புலிகள் TEA-யும் 1986-ல் முடிவுக்குக் கொண்டு வந்தனர். விலகிச் சென்ற TEA-இன் உறுப்பினர்கள் போக, ஏனைய சிலர் விடுத லைப் புலிகளிடம் TEA-இன் ஆயுதங்களையும் ஏனைய உடமைகளையும் கையளித்து இணைந்து கொண்டனர்.
சில ஆண்டுகளில் மகேஸ்வரன் விடுதலையாகினாலும் மீனம்பாக்கம் விமானக் குண்டுவெடிப்புத் தொடர்பாக மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிட்டது. இது நீண்ட காலத்தை எடுத் தது. அதிலிருந்து விடுதலையானவர், ஆபிரிக்காவுக்குச் சென்றார். அங்கே மகேஸ்வரனை இனங்கண்ட தான்சானிய அரசு மீண்டும் சிறைப்படுத்தியது. ஈழ விடுதலைப் போராட் டத் தலைவர்களின் மிக நீண்ட சிறை வாழ்க்கையை அனுபவித்த தலைவர் மகேஸ்வரனே!
இப்படியே நீண்ட சிறைவாழ்க்கையை அனுபவித்த பிறகு அவர் மீண்டும் 2014-ல் இலங்கைக்குத் திரும்பியிருந்தார். இலங்கையில் மகேஸ்வரனை, அவருடைய பாடசாலைக் கால நண்பரும் சிறையில் சகவாசியுமாக இருந்த டக்ளஸ் தேவானந்தா வரவேற்று அழைத்தார்.
இலங்கைக்குத் திரும்பிய பிறகு மகேஸ்வரன் அமைதியாக இருந்து கொண்டார். அவர் சிறைக் காலத்திலும் பின்னரும் தேடிக்கொண்ட அறிவாற்றல் மிக உயர்வானது. ஆனாலும் அதை அவர் எங்கும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. நண்பர்களுடனான உரையாடல்களைத் தவிர, பொதுவெளி யில் எழுதவோ, பேசவோ அவர் முயற்சிக்கவில்லை. அதில் அவருக்கு நாட்டமுமில்லை. சமகால ஈழத்தமிழரின் அரசிய லில் அவருக்குக் கடுமையான விமர்சனமும் கவலைகளும் இருந்தன என்றபோதும்கூட, அவற்றைக் குறித்து அவர் பொதுவெளியில் ஒரு சொல் பேசியதில்லை. அந்தளவுக்குக் கனத்த மௌனத்தைக் கொண்டிருந்தார். பதிலாக உள்ளே அனலாக விடுதலை எண்ணம் கொதித்துக் கொண்டிருந்தது. தன்னுடைய சமகாலத்தைச் சேர்ந்த பலர் அரசியலில் தீவிர மாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றபோதும் அவர்களோடுகூட, அவர் உரையாடல்களையோ அரசியற் தொடர்புகளையோ மேற்கொள்ள முயற்சிக்கவில்லை. அது பயனற் றது என்ற அபிப்பிராயமே அவரிடமிருந்தது.
ஏறக்குறைய தன்னுடைய அரசியற் காலம் முடிந்து விட்டது என்ற கணிப்பே அவரிடமிருந்தது. தன்னுடையது மட்டுமல்ல, சமகாலத்திலுள்ள பிறருடைய செயற்பாட்டு முறைகளின் காலமும் முடிந்து விட்டது, இனிப் புதியதொரு தொடக்கமே வேண்டும் என்று மகேஸ்வரன் கருதினார். அதை நிச்சயமாக அந்தக் காலம் கொண்டு வரும். சிலவேளை அதற்கான நாட் களோ ஆண்டுகளோ இன்னும் கொஞ்சம் தாமதமாகலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
இந்த எண்ணம் அவரை ஒரு அரசியல் அவதானிப்பாளரா கவே நிறுத்தியது. இல்லையெனில் அவர் சேகரமாக்கி வைத்திருந்த அறிவையும் அரசியல் அனுபவத்தையும் கொண்டு புதிய ஒரு கட்சியை உருவாக்கியிருக்க முடியும். அல்லது பிற கட்சிகளில் செல்வாக்கான இடமொன்றைப் பெற்றிருக்கலாம். இரண்டும் அவசியமில்லை என்பதே மகேஸ்வரனின் நிலைப் பாடு. இதனால் ஒரு வரலாற்று நாயகன் மிக அமைதியாக இருந்தார்.
அரசியற் செயற்பாடுகளைக் குறித்துரைப்போர் இதை மறுத் துக் கடுமையாக விமர்சிப்பர். ஒரு போராளி அல்லது அரசி யல் உணர்வாளர் எந்தச் சூழலிலும் விலகி ஓய்ந்திருக்கவோ, அமைதியாக இருக்கவோ முடியாது. எந்தச் சூழ்நிலைக்குள் ளும் தன்னைத் தகவமைத்துக் கொண்டு இயங்க வேண்டும். அதுவே அரசியற் செயற்பாட்டாளுமையின் அவசியப் பண்பா கும் எனக் கூறுவர்.
ஒரு வகையில் அது சரியானதுதான். ஆனால், அப்படிச் செயற்பட வேண்டுமெனக் கருதி மக்களுக்கு மேலும் பாதிப்பு களை உண்டாக்கும் அரசியலை முன்னெடுப்பதைவிட விலகி நிற்பது, புதிய – இளைய தலைமுறையின் எழுச்சிக் கும் வளர்ச்சிக்கும் உதவும். அதுவும் ஒரு வகையான அரசி யற் பணிதான். பிற நற்சக்திகளுக்கு இடமளித்தல் என்ற வகையில்.
இதனால்த்தான் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் எத்தகைய கண்டனங்களுக்கும் வரலாற்றின் முகச்சுழிப்புக்குள்ளாகாமல், தன்னுடைய இறுதி நாட்களை முடித்துக் கொள்ளக் கூடி யதாக இருந்தது. அவருடைய மரணம், பலருடைய உளத்தி லும் மிகப் பெரிய மதிப்பையும் துயரத்தையும் உண்டாக்கியிருக்கிறது. ஒரு வரலாற்று நாயகர், மிகச் சாதாரணமாகவே மறைந்து கொண்டார். அந்த இடத்தைக் கொடுத்தது, அவரு டைய எளிமையான, நேர்மையான வாழ்க்கைத் தெரிவேயாகும்.
ஆம், தம்பா, தம்பாப்பிள்ளை மகேஸ்வரன், பனாக்கொட மகேஸ்வரன் என்றெல்லாம் அறியப்பட்ட ஒரு வரலாற்று நாயகருக்கு ஈழத் தமிழர்கள் எத்தகைய வரலாற்று மதிப்பை வழங்கப்போகிறார்கள் என்பது, அவர்களுடைய அரசியற் பயணத் தைப் பொறுத்ததே. மகேஸ்வரனின் இறுதி நிகழ்வில் அவரு டைய சகோதரியின் பிரிவாற்றாமை வார்த்தைகளின் பொருளும் அதுதான்.
நன்றி- ‘தாய்வீடு’ பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் கட்டுரையாசிரியர் ஆகியோர்க்கு