முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இதன்படி தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறைப் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்-அமைச்சரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இந்த சூழலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் வழியாக நேற்று பிற்பகல் அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு முதல்-அமைச்சருக்கு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சென்றடைந்துள்ளார். அங்கு முதல்-அமைச்சருக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.