பூஜா கேத்கரை கைது செய்ய செப்.4 வரை காவல்துறைக்கு தடை விதித்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
போலியான ஓபிசி சான்றிதழ், மாற்றுத் திறனாளி சான்றிதழ் அளித்து, யுபிஎஸ்சி தேர்வெழுதுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகளையும் தாண்டி பெயரை மாற்றி தேர்வெழுதியதாக ஐஏஎஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பூஜா கேத்கர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்த சூழலில், தன்னை தகுதிநீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முன்ஜாமீன் கோரியும் டில்லி உயர்நீதிமன்றத்தில் பூஜா கேத்கர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு எந்தவிதமான சலுகைகளை வழங்கினாலும், அது இந்த வழக்கின் அடிப்படை ஆதாரங்களையே வேறருத்துவிடும் என்று கூறி, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என காவல்துறை நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், யுபிஎஸ்சி தேர்வுகள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் பூஜா கேத்கரின் நடவடிக்கைகள் இருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பூஜா கேத்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ஏற்கெனவே ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட தன்னை தகுதிநீக்கம் செய்ய யுபிஎஸ்சி-க்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சட்டப்படி மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மட்டுமே தன் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தனது வாதத்தை பதிவு செய்துள்ளார். அதனுடன், 2012 முதல் 2022 வரை தாக்கல் செய்த விண்ணப்பத்தில் முதல் பெயரிலும் குடும்பப் பெயரிலும் எவ்வித மாற்றமும் செய்யவில்லை என்றும், பயோமெட்ரிக் தரவுகளை யுபிஎஸ்சி சரிபார்த்துள்ளதாகவும் பூஜா கேத்கர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 5ம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், அடுத்தக்கட்ட விசாரணை வரை பூஜா கேத்கரை கைது செய்ய காவல்துறைக்கு தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.