மலையாள திரை உலகில் பாலியல் பலாத்கார அத்து மீறல்கள் அதிகளவு நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை நடத்த கேரள அரசு உத்தர விட்டது. அதன்படி நீதிபதி ஹேமா மலையாள திரையுலகில் நடக்கும் அத்துமீறல்களை ஆய்வு செய்து கண்டுபிடித்து பெரிய அறிக்கையாக தயாரித்தார். கடந்த 2019-ம் ஆண்டு அந்த அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். கடந்த சில ஆண்டுகளாக அந்த அறிக்கை வெளி யிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் அந்த அறிக்கையின் ஒரு பகுதி மட்டும் வெளியானது. அதில் வெளியான தகவல்கள் மலையாள பட உலகை சுனாமியாக சுருட்டி வீசும் வகையில் புயலை கிளப்பி உள்ளது. நீதிபதி ஹேமா ஆணைய அறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் மினு குரியன், ஸ்ரீலேகா மித்ரா உள்பட பல நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறினார்கள். நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, இடைவேள பாபு, சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்பட பலர் மீது பாலியல் பலாத்கார புகார்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது மட்டும் 376, 354, 509 ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி உள்ளன. நடிகர் முகேஷ் மீது பதிவாகி இருக்கும் 376-வது பிரிவு கற்பழிப்புக்கான தண்டனை பெற்று தரும் சட்டப்பிரிவாகும். இந்த பிரிவில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வெளியில் வர இயலாது. இதை அறிந்த நடிகர் முகேஷ் அவசரம் அவசரமாக எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதன்பேரில் செப்டம்பர் 3-ந்தேதி வரை அவரை கைது செய்யக்கூடாது என்று எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ், பா.ஜ.க. போர்க்கொடி தூக்கி உள்ளது. இந்தநிலையில் கம்யூனிஸ்டு மூத்த தலைவர்கள் அனைவரும் நடிகர் முகேசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.