ஓமியம் நிறுவனத்துடன் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 31.8.2024 அன்று அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குவதோடு, 39,000-க்கும் மேலான தொழிற்சாலைகள், 2.6 மில்லியன் அளவிற்கு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் என இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சி மையங்கள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு, மனிதவளங்கள் மற்றும் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது. இத்தகைய சிறப்புகளை கொண்ட தமிழ்நாட்டில், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடன் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தின் போது, சான்பிரான்சிஸ்கோவில் 29.8.2024 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, 2 இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சான்பிரான்சிஸ்கோவில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் முன்னிலையில் ஓமியம் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.