வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என தெரிவித்துள்ளவர், தனது கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார், தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்ததையடுத்து கட்சியின் பாடலையும் வெளியிட்டுள்ளார். விஜய்யின் அடுத்தடுத்த அதிரடியாக தமிழக அரசியல் கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளது.
இந்தநிலையில் அரசியலில் நுழைந்தள்ள விஜய் இதுவரை நேரடியாக அரசியல் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. முதல் முறையாக தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகிற 23 தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழக மாநாட்டை திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு வரக்கூடிய கட்சி நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பான முறையில் அழைத்து வருவது மற்றும் மாநாடு முடிந்த பிறகு பாதுகாப்பான முறையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகமே ஆவலோடு எதிர்பார்த்துள்ள தமிழக வெற்றி கழக மாநாட்டில் விஜய் தனது கட்சியின் கொள்கை திட்டங்களை அறிவிப்பார் என அவரது ரசிகர்கள் காத்துள்ளனர்.