டில்லியின் ஓக்லா தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆம் ஆத்மி கட்சி அமானதுல்லாகான் உள்ளார். இவர் டில்லி வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த போது சட்ட விரோதமாக ஆள் சேர்ப்பு செய்ததாகவும், ரூ.100 கோடி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக ஓக்லாவில் உள்ள அமானதுல்லாகான் வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையொட்டி அவரது வீட்டு முன்பு டில்லி காவல்துறையும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவரது வீட்டிற்கு செல்லும் சாலையிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அமலாக்கத்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்திய போது ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருட்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அமானதுல்லாகான் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அதில் பா.ஜ.க. அரசு தன்னையும், மற்ற ஆம் ஆத்மி தலைவர்களையும் குறி வைப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், காலை சர்வாதிகாரியின் உத்தரவின் பேரில், அவரது கைப்பாவை யான அமலாகத்துறையினர் என் வீட்டிற்கு வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக போலி வழக்குகளை பதிவு செய்து அமலாகத்துறை துன்புறுத்துகிறது.
இந்நிலையில் அமலாக்கத்துறையினர் அமானதுல்லாகான் வீட்டில் சோதனை நடத்திய அதே நேரத்தில் அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தினர். சுமார் 6 மணி நேரம் வரை விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.